ADVERTISEMENT

நூற்பாலை ஊழியர் அடித்துக் கொலை; மனைவி, மைத்துனர் கைது

11:13 AM Nov 23, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சங்ககிரி அருகே, தனியார் நூற்பாலை ஊழியரை அடித்துக் கொன்ற வழக்கில் அவருடைய மனைவி, மைத்துனரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தாசநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால். குமாரபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சரிதா (38). இவர்களுக்கு 20 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. 20 வயதில் ஒரு மகளும், 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு கணவன், மனைவிக்குள் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, சரிதா கணவரைப் பிரிந்து சென்று விட்டார். அவர், சங்ககிரி ஆர்.எஸ். பகுதியில் தனியாக துணிக்கடை நடத்தி வருகிறார். இதற்கிடையே தனபால், உள்ளூரைச் சேர்ந்த சில பெரியவர்கள் மூலமாக தன் மனைவியை சமாதானப்படுத்தி தன்னுடன் சேர்த்து வைக்கும்படி கூறி வந்துள்ளார். தனபாலுக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தின் ஆர்.சி. புத்தகம், கல்விச்சான்றிதழ்கள், ஏ.டி.எம். அட்டை ஆகியவற்றை சரிதாவும், அவருடைய அண்ணன் சரவணனும் எடுத்து வைத்துக்கொண்டு தர மறுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்குள் மோதல் இருந்து வந்தது.

இந்நிலையில், நவ. 21 ஆம் தேதி இரவு தனபால், தனது மைத்துனர் சரவணன் வீட்டுக்குச் சென்று சரிதாவை சமாதானப்படுத்தி தன்னுடன் சேர்த்து வைக்கும்படியும், தன்னுடைய வாகனத்தின் ஆர்.சி. புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து விடும்படியும் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த சரவணன், சரிதா ஆகியோர் தனபாலை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். சரவணன் கீழே கிடந்த கல்லை எடுத்து தாக்கியுள்ளார். அக்கம்பக்கத்தினர் சண்டையை விலக்கி விட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் தனபால் மயக்கம் அடைந்து கீழே சரிந்து விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சங்ககிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பரிசோதனையில், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரிய வந்தது.

இதையடுத்து தனபாலின் தந்தை சின்னப்பன் (70), தனது மகனை கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டதாக சரவணன், சரிதா மீது சங்ககிரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் தேவி, எஸ்.ஐ. சுதாகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, தனபாலின் மனைவி சரிதா, மைத்துனர் சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் சரிதாவை, சேலம் பெண்கள் கிளைச்சிறையிலும், சரவணனை சேலம் மத்திய சிறையிலும் அடைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT