ADVERTISEMENT

“நாங்க வீட்டுக்கு போறது எப்போ...” - நித்யா கொலை வழக்கு பாதுகாப்பு போலீசார் புலம்பல் 

10:48 AM Aug 15, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த ஜேடர்பாளையம் அருகே உள்ள வீ.கரப்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி விவேகானந்தன். இவருடைய மனைவி நித்யா (வயது 28). பி.காம்., பட்டதாரியான இவர், வீட்டருகே உள்ள அடர்ந்த சீமைக் கருவேல முள்மரக்காட்டுக்குள், கடந்த மார்ச் 11 ஆம் தேதி ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றுள்ளார். அன்று மாலை, சீமைக்கருவேலங்காட்டை ஒட்டியுள்ள ஓடை சகதியில் இருந்து நித்யா சடலமாக மீட்கப்பட்டார். அவரை மர்ம நபர்கள் பாலியல் வன்புணர்வு செய்து, கழுத்தை நெரித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

ஜேடர்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவம் என்பவர் கரும்பாலை நடத்தி வருகிறார். அவருடைய ஆலையில் வேலை செய்து வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் மூன்று பேர், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள குட்டையில் அடிக்கடி பொழுதுபோக்கிற்காக மீன் பிடிக்க வருவார்கள். அவர்கள்தான் நித்யாவை கொலை செய்திருக்க வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர் சந்தேகம் கிளப்பினர். அதேநேரம், சதாசிவத்தின் கரும்பாலையில் வேலை செய்து வந்த நீலகிரியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், நித்யாவை கொலை செய்ததாக ஜேடர்பாளையம் காவல்துறையினர் கைது செய்தனர். நித்யாவின் பிறப்புறுப்பில் இருந்து சேகரிக்கப்பட்ட விந்தணுக்களும், சிறுவனின் உயிரணுக்களும் தடய அறிவியல் பகுப்பாய்வில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் அவர் மட்டுமே இந்தக் கொலையைச் செய்திருக்க முடியாது என்றும், மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்றும் நித்யாவின் கணவர் தொடர்ந்து சந்தேகம் கிளப்பி வருகிறார்.

இது ஒருபுறம் இருக்க, இந்த விவகாரம் வேட்டுவ கவுண்டர்கள் மற்றும் வெள்ளாள கவுண்டர்கள் இடையேயான சமூக மோதலாகத் திடீரென்று தடம் மாறியது. கொலையுண்ட நித்யா, வேட்டுவ கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். கரப்பாளையம், ஜேடர்பாளையம், சரளைமேடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் வெள்ளாள கவுண்டர் சமூகத்தினர் ஐம்பதுக்கும் மேற்பட்ட கரும்பாலைகளை நடத்தி வருகின்றனர். இவற்றில் பெரும்பாலும் ஹிந்தி மொழி பேசும் வடமாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களால்தான் நித்யா கொலை செய்யப்பட்டதாகக் கருதிய வேட்டுவ கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர், வெள்ளாள கவுண்டர்கள் உடனடியாக கரும்பாலைகளை மூட வேண்டும் என்றும், அங்குள்ள வடமாநிலத் தொழிலாளர்களை ஊரை விட்டே விரட்ட வேண்டும் என்றும் பேசத் தொடங்கினர்.

இதனால் ஊருக்குள் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவியது. இந்நிலையில்தான் சதாசிவம், ஜே.ஆர்.டி. என்கிற ஜே.ஆர்.துரைசாமி ஆகியோரின் கரும்பாலைகள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இப்படியான சம்பவங்கள் நடந்த பிறகு, அந்த கிராமத்திற்குள் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. இந்த பரபரப்பு ஓய்வதற்குள், மே 13 ஆம் தேதி எம்ஜிஆர் என்கிற முத்துசாமி என்பவரின் கரும்பாலையில் வேலை செய்து வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த கொட்டகை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் தீக்காயம் அடைந்த நான்கு பேர், கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் (19) என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம், ஒட்டுமொத்த காவல்துறையினரையும் ஒரு உலுக்கு உலுக்கியது. அதுவரை நாமக்கல் மாவட்ட காவல்துறை மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட பட்டாலியன், ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புப் பணிக்குக் குவிக்கப்பட்டனர். நித்யா கொலை வழக்கை சரியாகக் கையாளவில்லை என்றும், சட்டம், ஒழுங்கை கட்டுக்குள் வைக்கவில்லை என்றும் கூறி நாமக்கல் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை எஸ்பி, பரமத்தி வேலூர் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இவ்வளவு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தும், எம்ஜிஆர் என்கிற முத்துசாமியின் மருமகன் முருகேசனுக்குச் சொந்தமான வாழைத்தோப்புக்குள் புகுந்து 500க்கும் மேற்பட்ட மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். அடுத்து, சவுந்தரராஜன் என்பவரின் தோட்டத்தில் நள்ளிரவில் இறங்கிய மர்ம கும்பல் 3000 பாக்கு மரக்கன்றுகளை வெட்டி வீழ்த்தினர். இந்த சம்பவங்கள் தொடர்பாக 12க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்திருக்கிறது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக வெளி மாவட்ட காவலர்கள் இரவு, பகல் பாராமல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதால் உளவியல் ரீதியாக மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகப் புலம்பல்களும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன. சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணிகள் வழங்கினாலும், நான்கு மாதங்களுக்கு முன்பு யாரெல்லாம் இங்கு பணிக்கு வந்தோமோ அவர்களையே தொடர்ந்து பணியில் ஈடுபடுத்துவது மனச்சோர்வையும், உடல் களைப்பையும் ஏற்படுத்துகிறது என்கிறார்கள். குறிப்பாக இரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பெண் காவலர்களுக்கு போதிய பாதுகாப்போ, போக்குவரத்து வசதிகளோ இல்லை என்கிறார்கள்.

இது தொடர்பாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பெண் காவலர்கள் நக்கீரனிடம் பேசினர். “நித்யா கொலை நடந்த வீ.கரப்பாளையம், சரளைமேடு, ஜேடர்பாளையம், புளியங்காடு உள்ளிட்ட கிராமங்களில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக காவல்நிலைய காவலர்கள், பட்டாலியன், ஆயுதப்படை காவலர்கள் என 100 பெண் காவலர்கள் உள்பட 600 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களில் ஒரு பிரிவினருக்கு ஏ, பி என்று இரண்டு ஷிப்டு முறையிலும், மற்றொரு பிரிவினருக்கு ஏ, பி, சி என மூன்று ஷிப்டு முறையிலும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏ மற்றும் பி சுழற்சி பிரிவில் உள்ள காவலர்கள், தினமும் மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பாதுகாப்புப் பணியில் இருக்க வேண்டும். நள்ளிரவு 12 மணிக்கு மாற்று காவலர்கள் வந்து அவர்களை விடுவிப்பார்கள். இவர்கள் நள்ளிரவு முதல் காலை 7 மணி வரை பணியில் இருக்க வேண்டும். பெண் காவலர்களுக்கு, சென்சிட்டிவான ஒரு பகுதியில் நள்ளிரவுக்கு மேல் பாதுகாப்பு பணியேற்க வைப்பதும், காவல் பணியில் ஈடுபடுத்துவதும் வரலாற்றில் இதுதான் முதன்முறை. ஊரைச் சுற்றி ஆங்காங்கே திடீர் திடீரென்று கரும்பாலைகள், வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு, தீ வைப்பு சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், பாதுகாப்புp பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு ஆரம்பத்தில் '410 மஸ்கட்' ரக துப்பாக்கி பாதுகாப்புக்கு வழங்கப்பட்டு இருந்தது. சிறிது நாள்களிலேயே அந்த துப்பாக்கியையும் காவல்துறை மேலிடம் ஏனோ பறித்துக் கொண்டது.

நள்ளிரவு 12 மணிக்கு பாதுகாப்புப் பணிக்கு காவலர்கள் வந்தாலும், ஏற்கனவே டூட்டியில் இருக்கும் காவலர் மேலும் ஒரு மணி நேரம் அதாவது நள்ளிரவு ஒரு மணி வரை காவல் பணியில் இருந்து விட்டுதான் வீடு திரும்ப வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கின்றனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பெண் காவலர்களின் நிலை மிக மோசமானது. அர்த்த ராத்திரியில் பணி முடிந்து வீடு திரும்பும் பெண் காவலர்கள் பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் இல்லாததால் முன்பின் தெரியாத வாகன ஓட்டிகளிடம் லிப்ட் கேட்டு செல்ல வேண்டியுள்ளது. இப்படி லிப்ட் கேட்டுச் செல்லும்போது சில நேரங்களில் குடிகார ஆசாமிகளிடம் சிக்கி அவஸ்தைப்பட்ட பெண் காவலர்களும் உண்டு.

பெண் காவலர்கள் சிறுநீர் கழிக்க, சானிட்டரி நாப்கின் மாற்றுவது உள்ளிட்ட இன்னபிற தவிர்க்க முடியாத தேவைக்காக அந்த கிராமத்தில் உள்ளவர்களின் வீடுகளின் கழிப்பறையை பயன்படுத்திக் கொள்ள உதவி கேட்டாலும் யாரும் உதவி செய்வதில்லை. இரவு நேரங்களில் மரம், செடி, கொடிகளின் மறைப்பில் சென்று பெண் காவலர்கள் 'அவசரத்துக்கு' ஒதுங்க வேண்டிய அவல நிலை உள்ளது. சற்று ஓய்வெடுக்கக் கூட அறைகள் கிடையாது. பல கிராமங்களுக்கு இரவு 9.30 மணிக்கு மேல் பேருந்து வசதி இல்லாததால், நள்ளிரவு 12 மணிக்கு பாதுகாப்புக்குச் செல்ல வேண்டிய காவலர்கள் இரவு 10.30 மணிக்கெல்லாம் அவர்களுக்குப் பணி ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்குச் சென்று காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது.'' என தாங்கள் சுமந்து கொண்டிருந்த பாரத்தை நம்மிடம் கொட்டித் தீர்த்தனர் பெண் காவலர்கள்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஆயுதப்படை ஆண் காவலர்கள் சிலரிடம் பேசினோம். ''சார்... இந்த ஊரில், தவிச்ச வாய்க்கு தண்ணீர் கேட்டால்கூட, டேங்கில் தண்ணீர் வரும். போய் பிடிச்சுக் குடிங்க என வெறுப்பாகச் சொல்கிறார்கள். இந்த மாதிரியான மோசமான மக்களை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை. நாங்கள் இங்குள்ள கிராம மக்களை நம்பித்தான், அவர்களின் பாதுகாப்புக்காகத்தான் ஊர் விட்டு ஊர் வந்திருக்கிறோம் என்பதைக் கூட புரிந்து கொள்ளவில்லை.

எங்களுக்கு காலையில் பொங்கல், மதியம் கலவை சாதம், இரவு உப்புமா வழங்குகின்றனர். மோசமான உணவு இல்லை என்றாலும், நாங்களும் சாப்பாடு, சாம்பார், பொரியல்னு சாப்பிட்டு மாதக்கணக்கு ஆகிவிட்டன. இருக்கூரில் உள்ள மகளிர் குழு சமுதாயக்கூடத்தில்தான் தங்க வைக்கப்பட்டு இருக்கிறோம். ஏ, பி, சி பிரிவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் ஒரு ஷிப்ட் பணி வழங்கப்படுகிறது. மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அடுத்த ஷிப்டும், அதற்கு அடுத்து இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரையிலும் பந்தோபஸ்து பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து ஜேடர்பாளையம் பாதுகாப்புப் பணிக்கு வந்து நான்கு மாதங்கள் ஆகின்றன. தொடர்ச்சியாக இங்கு பணியில் இருக்கிறோம். மனைவி, குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஆனால் எங்களை மாதக்கணக்கில் விடுவிக்காமல் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது ஒருவித சலிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆண் காவலர்களை விட, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பெண் காவலர்களின் நிலை மோசமாக இருக்கிறது. எங்களை உடனடியாக விடுவித்துவிட்டு, வேறு காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். எங்கள் குறைகளை இதுவரை எந்த ஒரு உயர் அதிகாரியும் கேட்டதில்லை.'' என்கிறார்கள் ஆயுதப்படை காவலர்கள். தொடர்ந்து மாதக் கணக்கில் ஒரு பகுதியில் பாதுகாப்புப் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் குறைந்தபட்சம், சானிட்டரி நாப்கின் வசதியுடன் கூடிய மொபைல் டாய்லட் வசதியையாவது நாமக்கல் மாவட்டக் காவல்துறை செய்திருக்கலாம். குறிப்பாக, பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள நிலையில் இதுபோன்ற அடிப்படை வசதிகள் தேவையாகிறது.

'ரோல்கால்' நேரத்தில் ஆஜராக பெண் காவலர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதல் அவகாசம், விஐபிக்கள் வருகையின்போது சாலை பாதுகாப்புப் பணியில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு என்பதையெல்லாம் பேசும் இக்காலத்தில், ஜேடர்பாளையத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பெண் காவலர்களுக்கு அத்தியாவசிய அடிப்படை வசதிகளை செய்து தராமல் போனது ஏனென்று தெரியவில்லை. மன அழுத்தத்தால் டிஐஜி ஒருவரே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ள சம்பவத்தை, காவல்துறை அத்தனை சீக்கிரம் மறந்திருக்காது. இந்நிலையில், ஒரே இடத்தில் ஒரே பணியில் மாதக்கணக்கில் ஈடுபடுத்தப்படும்போது காவலர்களின் மனநிலை எந்தளவு பாதிக்கும் என்பதையும் நாமக்கல் மாவட்டக் காவல்துறை யோசிக்கவே இல்லை.


இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல்துறை எஸ்பி ராஜேஷ்கண்ணனிடம் கேட்டபோது, ''பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு 6 அல்லது 7 மணி நேரம்தான் பணி வழங்கப்படுகிறது. வசதிக் குறைபாடுகள் குறித்து என் கவனத்திற்கு யாரும் எதுவும் கொண்டுவரவில்லை. நீங்கள் சொன்ன இப்பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்,'' என்றார். காக்கி உடைக்கு மக்கள் மத்தியில் எப்போதும் மரியாதை இருக்கிறது. அதே மரியாதையும், சாதாரண காவலர்களை சக மனிதர்களாக கருதும் சிந்தனையும் உயர் அதிகாரிகளுக்கு வேண்டும் என்பதே காவலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT