/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4132.jpg)
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே, சேலம் சாலையில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன். இவர், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மின் பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அன்புச்செல்வி. இவர்களுடைய மகன் விக்னேஸ்வரன் (15). நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்த விக்னேஸ்வரன், பொதுத்தேர்வை எழுதிவிட்டு, அதன் முடிவுக்காக காத்திருந்தான்.
பொதுத்தேர்வை சரியாக எழுதவில்லை என வீட்டில் அடிக்கடி புலம்பி வந்திருக்கிறான். இதனால் பெற்றோர் அவனை கண்டித்துள்ளனர். விரக்தி அடைந்த விக்னேஷ்வரன், பரமத்தி வேலூர் அருகே படமுடிபாளையத்தில் உள்ள தாய்வழி பாட்டி வீட்டிற்கு கடந்த வாரம் சென்றுவிட்டான். இந்நிலையில் விக்னேஸ்வரன், மே11ம் தேதி திடீரென்று மாயமானான். பாட்டி, பல இடங்களில் தேடிப்பார்த்தார். அவன் சென்ற இடம் தெரியவில்லை. சந்தேகத்தின்பேரில், வீட்டின் பின்பக்கத்தில் உள்ள பயன்படுத்தப்படாத அறையைத் திறந்து பார்த்தார்.
அந்த அறையில், மேற்கூரையில் உள்ள இரும்பு கொக்கியில் சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் விக்னேஸ்வரன் சடலமாகக் கிடந்தான். அதிர்ச்சியில் உறைந்த பாட்டி, இதுகுறித்து தனது மகள், மருமகனுக்கு தகவல் அளித்தார். பெற்றோர் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் இன்னும் சில நாள்களில் வெளியாக உள்ள நிலையில், மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரமத்தி வேலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)