ADVERTISEMENT

“கோவைக்கு மட்டும் என்ன வேறு முதல்வரா? ; அன்னூர் முடிவே பரந்தூருக்கும் வேணும்” - போராட்டக் குழு கருத்து

06:30 PM Dec 19, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய இரண்டாவது விமான நிலையம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிற நிலையில் பரந்தூர் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலிருந்தும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து பரந்தூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அண்மையில் கூட சுற்றுவட்டார கிராம மக்கள் 'விவசாயத்தை அழித்து விமான நிலையமா?' என்ற பதாகைகளுடன் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் விமான நிலையத்துக்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து ஏகனாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 16 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று காலை கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றார்கள்.

நாளை காலை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டதால் பேரணியானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து போராட்டக் குழு உறுப்பினர் கதிரேசன் பேசுகையில், ''முதல்வரிடம் எங்கள் ஊரைப் பற்றி எடுத்துச்சொல்லி, விமான நிலையம் வேண்டாம் என்று சொல்வதே எங்களது கோரிக்கை. நாங்கள் அமைச்சர்களிடம் பேசிவிட்டோம். மறுபடியும் கூப்பிடுகிறார்கள் அப்பொழுது போய்த்தான் ஆக வேண்டும். ஏகனாபுரம் தன்னிச்சையாக இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு பின்னாடி எந்தவொரு அரசியல் பின்னணியும், அமைப்பு பின்னணியும் இல்லை. எங்களை யாரும் இயக்கவில்லை. இது மக்கள் போராட்டம். இந்த போராட்டம் மேலும் வலுப்பெறும். விமான நிலையம் வேண்டாம் என 146 நாட்களாகப் போராடி வருகிறோம்.

கோயம்புத்தூர் அன்னூருக்கு என்ன முடிவோ அதே முடிவுதான் பரந்தூருக்கும் வேண்டும். கோயம்புத்தூருக்கு வேறு முதலமைச்சரா? கோயம்புத்தூருக்கும் இதே முதல்வர்தானே. நாங்கள் அமைச்சர்களின் பேச்சுவார்த்தைக்கு போவோம். எங்களது கருத்துக்களை எடுத்து வைப்போம். எங்களது கோரிக்கைகளை இன்னும் வலுவாகச் சொல்வோம்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT