ADVERTISEMENT

கடந்த வாரம் குப்பைக்கு போன மலர்கள் இன்று ரூபாய் 200- க்கு விற்பனை. 

01:06 PM Oct 06, 2019 | santhoshb@nakk…

விவசாயிகளின் வியர்வையில் மனக்கும் மலர்கள், கடந்த வாரம் வரை விலையில்லாமல் விற்பனை செய்யப்படாமல் டன் கணக்கில் மலர்கள் குப்பைக்கு போனது. இதனால் உற்பத்தி செலவைக் கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். இந்த நிலையில் தான் அயுத பூஜைக்காக இன்று ஒரு நாள் மலர்களின் விலை உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், செரியலூர், மாங்காடு, வடகாடு, அணவயல், சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், பனங்குளம், குளமங்கலம், பாண்டிக்குடி, நெய்வத்தளி, மேற்பனைக்காடு என்று சுற்றியுள்ள கிராமங்களிலும், திருவரங்குளம் அருகில் உள்ள செம்பட்டிவிடுதி, மழையூர் உள்ளிட்ட சுமார் 100 கிராமங்களில் மலர் சாகுபடி அதிகம். ஒவ்வொரு நாளும் கீரமங்கலம் மலர் சந்தைக்கு 15 டன் வரை மலர்கள் விற்பனைக்கு வருகிறது.

ADVERTISEMENT


ரோஜா, மல்லிகை, முல்லை, கனகாம்பரம் போன்ற மலர்களுடன் மாலைகள் கட்டப்பயன்படும் சென்டி, சம்பங்கி, கோழிக்கொண்டை, வாடாமல்லி, அரளி போன்ற மலர் உற்பத்தியும் அதிகம். இந்த நிலையில் தான் கீரமங்கலம் மலர் சந்தையில், கடந்த வாரத்தில் தொடர்ந்து 15 நாட்களுக்கு மேலாக சம்பங்கி மலர்கள் கிலோ ரூபாய் 5 க்கு விற்பனை ஆனது. அதேபோல் சென்டிப் பூக்கள் கிலோ ரூ. 5 க்கும் விற்பனை ஆனது. இதனால் ஒவ்வொரு விவசாயிக்கும், ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. அந்த பூக்களையும் விற்க முடியாமல், ஒரு நாளைக்கு 3 முதல் 5 டன் மலர்கள் வரை குப்பைக்கு போனது. இதனால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனா்.


நாளை ஆயுத பூஜை, விஜயதசமி என்று அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருவதால், மலா்களின் விலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கீரமங்கலம் மலர் சந்தையில் இன்று மல்லிகை, முல்லை, அரளி பூக்கள் கிலோ ரூ. 400- க்கும், கனகாம்பரம் ரூ. 300- க்கும் விற்பனை ஆனது. கடந்த வாரம் ரூ. 5- க்கு கூட வியாபாரிகளால் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட சம்பங்கி மலர்கள் இன்று கிலோ ரூ. 200- க்கும், சென்டிப் பூக்கள் கிலோ ரூ. 50 முதல் 80 வரைக்கும் விற்பனை ஆனது. மலர்களின் விலை தொடர்ந்து விலையேற்றத்தில் இருந்தால் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் நஷ்டம் ஏற்படாமல் இருக்கும் என்கிறார்கள் சந்தை வியாபாரிகள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT