ADVERTISEMENT

“மாவட்ட ஆட்சியர், அமைச்சர் வீடுகளில் நெல்லை கொட்டி போராட்டத்தை நடத்துவோம்” - விவசாயிகள் ஆவேசம்!

01:15 PM Oct 12, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறையாகக் கொள்முதல் செய்யவில்லை என ஒவ்வொரு கிராமங்களிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

டெல்டா மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீரைக் கொண்டு சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெல்லை, அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவந்து கொட்டி, மாதக்கணக்கில் காத்திருக்கும் அவலமே நிலவிவருகிறது. முறையாகக் கொள்முதல் செய்யாததால் திடீரென ஒரு வார காலமாக பெய்த தொடர் மழையால் நெல் முளைத்து விவசாயிகளை கவலையில் ஆழ்த்தி போராட்டத்திற்கு தள்ளியிருக்கிறது.


திருவாரூர் மாவட்டம் வடுவூர் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவந்து கொட்டி, 1 மாதத்திற்கு மேலாகிவிட்டது. இதுவரையிலும் நேரடி கொள்முதல் நிலையத்தில் முறையாக நெல் கொள்முதல் செய்யவில்லை, என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழக அரசையும், உள்ளூர் அமைச்சரான உணவுத்துறை அமைச்சர் காமராஜையும், மாவட்ட ஆட்சியரையும் கண்டித்தனர். அப்போது, விவசாயிகள் திடீரென நெல்லை சாலையில் கொட்டி படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

போராட்டத்தில் இருந்த விவசாயிகள் கூறுகையில், "உணவுத்துறை அமைச்சரான காமராஜ் எங்க ஊருக்கு பக்கத்து ஊர்க்காரர்தான். தினசரி ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்வதாகவும், விவசாயிகளுக்கு எவ்விதப் பாதிப்பும் வராதபடி எல்லா பகுதிகளிலும் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

ஆனால், உண்மையில் மாதக்கணக்கில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யாமல் நெல்மணிகள் முளைத்துவிட்டது. ஆகவே இனியாவது விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்களை உடனடியாக நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யவேண்டும். இரண்டு நாட்களுக்குள் விவசாயிகள் கொண்டு வந்துள்ள அனைத்து நெல்லையும் உடனடியாகக் கொள்முதல் செய்யவில்லையெனில், விவசாயிகளை ஒன்று திரட்டி மாவட்ட ஆட்சியர் வீட்டின் முன்பும், அமைச்சர் வீட்டின் மூன்பும் நெல் மூட்டைகளை கொட்டி குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம்." எனத் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT