தமிழகத்திலேயே அதிக மணல் கொள்ளை நடக்கும் மாவட்டமாக திருவாரூர் மாவட்டம் இருக்கிறது. குறிப்பாக அமைச்சர் காமராஜின் சொந்த தொகுதியான நன்னிலத்திலேயே அதிக மணல் கொள்ளை நடப்பதாக பொதுமக்களும், அரசியல்கட்சிகளும், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்ட வரிசையில் கம்யூனிஸ் கட்சியினர் தொடர் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என பேரளம் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தை செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தின் பின் தங்கிய தாலுகாவாக இருக்கிறது நன்னிலம். அத்தொகுதியில் பிரதான தொழில் விவசாயம் மட்டுமே. தொகுதியின் எம்.எல்.ஏவான அமைச்சர் காமராஜை தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெறவைத்த தொகுதியின் நிலமை இன்று கவலைக்கிடமாக இருப்பதாக பொதுமக்கள் கவலை கொள்கிறார்கள்.
அமைச்சர் காமராஜின் வலது, இடது, எடுப்பு, துடுப்புகளாக இருக்கும் அனைவருமே விளைநிலங்களையும், நீர்நிலைகளையும், ஆற்றுப் படுகைகளையும் குறிவைத்து மணல் வேட்டை நடத்தி வருகின்றனர். மணல் வேட்டையில் அமைச்சர் காமராஜ் அக்கா மகன் ஆர்,ஜி, குமாரே தலைமையேற்று நடத்துவதாகவும் மணல் வேட்டையில் அமைச்சர் காமராஜ்க்கு கமிஷன் கொடுத்து விடுவதாகவும் மணல்மாபியாக்கள் மார்தட்டுகின்றனர். கையூட்டு பெறுவதில் அதிகாரிகளும் சலைத்தவர்கள் இல்லை என்பதுபோல கண்டுகொள்வதில்லை என்கிறார்கள் பொதுமக்கள்.
"ஆட்சியாளர்களே இப்படி செய்தால், அதிகாரிகளை இப்படி கையூட்டு பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருந்தால் நாங்கள் யாரிடம் குறை கூறுவது, இன்னும் ஒரு சில ஆண்டுகளில் நன்னிலம் தாலுகா வறட்சியின் பிடியில் சிக்கி காணாமல் போய்விடும். அவ்வளவு மணல் கொள்ளைகள் இரண்டு ஆண்டுகளில் நடந்துவிட்டது. இதை இனியும் அரசு கவனத்தில் கொள்ளாமல் இருந்தால் நிலத்தடி நீராதாரம் படு பாதாளத்திற்கு போய்விடும்," என்கிறார்கள் போராட்டத்தில் இருந்த விவசாய தோழர்கள்.