ADVERTISEMENT

’நாளை பேருந்துகள் ஓடினால் உடைப்போம்’ - முதல்வர் முன்னிலையில் கூச்சல் எழுப்பியதால் பரபரப்பு

09:51 PM Sep 09, 2018 | sundarapandiyan


பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நாடு முழுவதுமான பொது வேலை நிறுத்தத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி காங்கிரஸ் ஆளும் மாநிலமான புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகின்றது.
அதனையொட்டி போராட்டத்தை முழுவீச்சில் நடத்துவது தொடர்பான செயற்குழு கூட்டம் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாநிலத்தலைவர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

கூட்டத்தில் மறைந்த திமுக முன்னாள் தலைவர் கலைஞர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு, ரெபெல் விமான ஊழல் குறித்து கண்டனம் தெரிவித்து வரும் 15 -ஆம் தேதி புதுச்சேரி , காரைக்கால் பகுதியில் மாபெரும் கண்டன பேரணி நடத்து உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி " கடந்த நான்கு ஆண்டுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் அறிவித்துள்ளது இதுவே முதன்முறை. புதுச்சேரி வியாபாரிகளும், பொதுமக்களும் சிரமம் பாராமல் ஒத்துழைப்பு தரவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். மேலும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது எனவும் நாராயணசாமி அறிவித்தார்.

முன்னதாக நாராயணசாமி முன்னிலையிலேயே, 'புதுச்சேரியில் நாளை பேருந்துகள் ஓடினால் உடைப்போம்' என காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூச்சல் எழுப்பியதால் கூட்டத்தில் சலசலப்பும் பரபரப்பும் ஏற்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT