பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி மாநிலம் கடந்த 1954, நவம்பர் 1 ஆம் தேதி விடுதலை பெற்றது. ஆனாலும் 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16- ஆம் தேதி புதுச்சேரி இந்தியாவோடு முறைப்படி இணைந்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை முறைப்படி ஏற்றுக்கொண்டது. அந்த நாளை கொண்டாடும் வகையில் புதுச்சேரி இந்தியாவோடு இணைப்பு குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டதனடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த இடமான கீழூரில் புதுச்சேரி சட்டப்பூர்வ பரிமாற்ற தினம்நேற்றுகொண்டாடப்பட்டது.

Advertisment

இவ்விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தேசியக்கொடியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து அங்குள்ள நினைவிடத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, ஆளுநர் கிரண்பேடி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏக்கள் அன்பழகன், வெங்கடேசன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் விடுதலை போராட்ட தியாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மாலையில் நடைபெற்ற தியாகிகள் கவுரவிப்பு விழாவில் பங்கேற்று தியாகிகளை கவுரப்படுத்திய முதல்வர் நாராயணசாமி, “தியாகிகள் பென்ஷன் தொகை ரூபாய் 1000 உயர்த்தப்பட்டு, ரூபாய் 8 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 9 ஆயிரமாக உயர்த்தப்படும்” என அறிவித்தார்.

Advertisment