ADVERTISEMENT

பி.ஜே.பி.யை வீழ்த்தும் வழி! கி.வீரமணி அறிக்கை

06:09 PM Dec 20, 2018 | rajavel




வட மாநிலங்களில் காங்கிரசு, பி.எஸ்.பி., சமாஜ்வாடி கட்சிகள் பார்ப்பனர்களைத் திருப்தி செய்வதற்குப் பதிலாக நூற்றுக்கு 97 பேர்களாக இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினரை ஒருங்கிணைப்பதே - மதவாத உயர்ஜாதி பி.ஜே.பி.யை வீழ்த்துவதற்கான உத்தி என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ADVERTISEMENT

அகில இந்திய காங்கிரசு தலைவராக பச்சைத் தமிழர் காமராசர் அவர்கள் பொறுப்பேற்று, வடமாநிலங் களுக்குச் சுற்றுப்பயணம் செய்து முடித்துத் திரும்பிய பின், சென்னையில் முதன்முதலாக ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

ADVERTISEMENT

அதில் ‘‘புதிய பதவி அனுபவம், பணிச் சுமைகள் எப்படி இருக்கின்றன'' என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளிக்கையில்,

‘‘பணியில் ஒன்றும் கஷ்டமில்லை; அங்கே உள்ள மூடநம்பிக்கைகளையும், ஜாதி, மத வெறிகளையும் பார்த்தால், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பெரியார் அல்ல; நூறு பெரியார்கள் தேவைப்படுகிறார்கள் என்பதே அங்குள்ள மோசமான நிலை'' என்று விளக்கினார்!

பெரியார் ஏன் தேவைப்படுகிறார்?

ஏன் பெரியார் தேவைப்படுகிறார் இன்றும்? அதிக மாக வட மாநிலங்களில் ஜாதி ஆதிக்கம் - பார்ப்பன மற்றும் மேல்ஜாதி வெறியும், ஆதிக்கமும் அப்பட்டமாகத் தலைவிரித்தாடுகிறதே!


அதிலும் குறிப்பாக இந்தி மண்டலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர்காண்ட், குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், அரியானா, டில்லி மற்றும் கருநாடகத்தில் மங்களூரு, தர்வாட் போன்ற பல பகுதிகளில் ஒடுக்கப்பட்டோர், குறிப்பாக தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களின் நிலை, ரத்தக் கண்ணீர் சிந்தவேண்டிய பரிதாப நிலையில்தான் உள்ளது! அதுபோலவே, சிறுபான்மைச் சமூகமான முசுலிம்களும்கூட ‘குஜராத் வைத்தியங்கள்'மூலம் சதா அச்சத்திலேயே வாழவேண்டிய நிலை!

அரசமைப்புச் சட்டம்
என்ன கூறுகிறது?

உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்றில் தெளிவாகச் சுட்டிக்காட்டியதுபோல, இந்து மதத்தின் சதுர்வருண - ஜாதி முறையில் வடநாட்டில் மட்டும்தான் நாலு ஜாதி வருண முறை - தென்னாட்டில் பிராமணன் - சூத்திரன் மட்டுமே! ‘‘பஞ்சமன்'' (அவுட் காஸ்ட்) அவர்ணஸ்தர் பட்டியலில் உள்ளனர்.

வருண ஜாதி முறையில் அடுக்கு ஜாதி முறை காரணமான பேதம் Graded inequality என்பதால் எங்கும் பார்ப்பனர் தூண்டுதல்; விளைவு - நாலாம் ஜாதியினர் 5 ஆம் ஜாதியினரிடையே மோதல் என்பது தவிர்க்க இயலாத நடைமுறையாகி விட்டது!

நமது அரசியல் சட்டத்தின் 17 ஆம் பிரிவுப்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது; ‘‘அதனை எந்த ரூபத்தில் கடைப்பிடித்தாலும் சட்டப்படி குற்றமே!''


அதனை செயல்படுத்தும் வகையில்தான் சிவில் உரிமை வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1955 இல் இயற்றப்பட்டு, அதனை சக்திவாய்ந்த முறையில் நடை முறைப்படுத்த மேலும் அதற்கு சட்ட திட்டங்களும் (Rules) விதிகளும் உருவாகி, அது அடுத்து மேலும் கூர்மையாக்கப்பட்டது.

மேல்ஜாதியினர் பாதிக்கப்படுகின்றனராம்!

அதனால் பாதிக்கப்படுவதாக மேல்ஜாதிக்காரர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, உயர்ஜாதி உணர்ச்சிக்குப் பாதுகாப்பளிப்பதைப்போல், அந்த சிவில் உரிமை பாதுகாப்புச் சட்டத்தின் வலிமையைப் போக்கி, பல்லில்லாமல் ஆக்கியதைக் கண்டு, பாதிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களும், சமூகநீதியாளர்களும் ஒன்று திரண்ட எழுச்சி - போராட்டம் கிளர்ச்சியாக வெடித்ததால், அதைக் கண்டு திணறிய மோடி அரசு, வேறு வழியின்றி பழைய வலிமையை - மறு சீராய்வு மனு போட்டு - திரும்பப் பெறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

பார்ப்பனர்கள் நடத்திய பந்த்!

இது தேசிய அவமானம் மட்டுமல்ல - உலக சர்வதேச அவமானமாகி விடுகிறதே என்ற அச்சத்தால், மத்திய அரசு - மோடி அரசு - பா.ஜ.க. அரசு செயல்பட்டது!


இதனை எதிர்த்து, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டில்லி, உத்தர்காண்ட் முதலிய பல மாநிலங்களில் பார்ப்பனர்கள் ‘‘பாரத் பந்த்'' என்று வெளிப்படையாகவே வீதிக்கு வந்து இந்தத் திருத்தப் பட்ட சட்ட மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெறவேண்டும் என்று பேரணிகள், மாநாடுகளை நடத்தினர். 5 மாநில தேர்தல்களை வைத்து பி.ஜே.பி. முதல்வர்களை மிரட்டினர்.


பார்ப்பனர் - உயர்ஜாதி இந்துக்கள் ஆகியோர் கூட்டணி போல ஒரு சேரக் குரல் கொடுத்தனர்; பசு மாட்டுக்குத் தந்த பாதுகாப்பு, உழைக்கும் எம் சகோதர, சகோதரிகளான ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கு அங்கே கிடைக்கவில்லை.

தேர்தல் காலத்தில் காங்கிரசும் வாக்கு வங்கிக்கேற்ப அதனை வெளிப்படையாக மறுக்காமல் மவுனமானது. பார்ப்பனர் - மேல்ஜாதி வாக்குகளை வாங்கும் உத்தி களிலேயே கவனம் செலுத்தியது; எப்படியோ பா.ஜ.க. ஆட்சியை இந்தி இதய மாநிலங்களில் அகற்றி, ஆட்சியைப் பிடித்தது.

ஆர்.எஸ்.எஸ். அறிக்கை
என்ன கூறுகிறது?

இதனையே ஆர்.எஸ்.எஸ்., சுட்டிக்காட்டி, பா.ஜ.க. வுக்கு ஏன் தோல்வி என்பதற்கான ஓர் அறிக்கையைத் தயாரித்தது. மேல்ஜாதி மற்றும் க்ஷத்திரியர் கோபத்திற்கு பா.ஜ.க. ஆளானதே, இந்தத் தோல்விக்குக் காரணம் - இதைக் கருத்தில் கொண்டு, வருகின்ற 2019 நாடாளுமன்றத் தேர்தலை அணுக உரிய உத்திகளை, மாற்றங்களைச் செய்யவேண்டும் என்று தாக்கீது அனுப்பியுள்ளது!

‘‘எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்கி''லியின் கட்டுரை

24.11.2018 அன்று வெளிவந்த ‘‘எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி'' என்ற அரசியல், பொருளாதார ஆய்வு வார ஏட்டில், ‘ஊர்மிலேஷ்' என்ற அரசியல் விமர்சகர் விளக்கமாக எழுதிய இந்தி கட்டுரையின் ஆங்கில மொழியாக்கம் வெளிவந்துள்ளது!


அந்தக் கட்டுரையில் முக்கியமாகக் குறிப்பிட்டிருப்ப தாவது:

அதில் மிகத் தெளிவாக, ‘‘பா.ஜ.க. - காங்கிரசு மட்டுமல்ல, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், முலாயம்சிங் - அகிலேஷின் சமாஜ்வாடிக் கட்சியும்கூட பார்ப்பன மேல்ஜாதிக்காரர்களை (Appease) எப்படி ‘‘திருப்திப்படுத்துவது'' என்ற பாணியில், தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் நலத்தைக்கூட விட்டுக் கொடுத்து, தாங்கள் ஆட்சியில் நிலைக்க எண்ணு கிறார்கள்; காரணம், இந்திய மாநிலங்களிடையே இரட்டை இலக்கம் 12 சதவிகிதம் பார்ப்பனர் இருக்கும் ஒரே மாநிலம் உ.பி.தான் என்பதால், அவர்களைத் திருப்தி செய்யவும், அவர்களிடம் மனங்கோணாமல் ‘ஆசி' வாங்கவும் வளைந்து கொடுக்கின்றனர்.

பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கட்சிகளின்
நிலைப்பாடு

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை, கன்ஷிராமின் பகுஜன் சமாஜ் கட்சியை, வெகுஜன் சமாஜாக்கி அதற்கு Social Engineering என்றெல்லாம் ஏதோ சமூக சம ஏற்பாடு அமைப்பு என்றெல்லாம் மாற்றுப் பெயர் வைத்தால், பார்ப்பனர் - மற்ற மேல்ஜாதியினரின் கை ஓங்கி, ஒடுக்கப்பட்டோர் உரிமைக்கான, பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது'' என்று சரியான அரசியல் நிலவரத்தை ‘ஸ்கேன்' செய்து காட்டியிருக்கிறார் கட்டுரையாளர்.

பார்ப்பனர்கள் மாறிவிட்டார்களா?

3 சதவிகித பார்ப்பனர்கள் இருக்கும் தமிழ்நாட்டில் கூட, அரசியல் கட்சிகள் பலவற்றிற்கும் - நம்மால் ஆதரிக்கப்படுபவர்கள் உள்பட இந்த பார்ப்பன ஓட்டு என்ற மாயையைப் பார்த்து பயம் வருவது கண்கூடு.


அவர்கள் என்ன சொன்னாலும், மாறிவிட்டேன் என்றாலும், நம்பமாட்டார்கள்; ஓட்டுப் போடுவதில்லை.


அதற்குச் சரியான அணுகுமுறை - மொத்தம் 100 என்று கணக்கெடுக்காமல், 97 என்றே கணக்கெடுத்து, அதனைப் பெரும்பாலான மக்களுக்கு உணர்த்தி, நம்வயப்படுத்தும் பிரச்சார, செயல் திட்ட உத்திகளே சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்.


உ.பி.யில் 12 சதவிகிதம் பார்ப்பனர்கள் இருந்தால், பயப்படவேண்டுமா?

பெரும்பான்மை பார்ப்பனரல்லாதாரை ஒருங்கிணைக்க வேண்டாமா?

88 சதவிகிதம் மற்றவர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், இசுலாமியர்கள், சிறுபான்மையினர் உள்பட பலரையும் ஓரணியில் திரட்டி,Polorisation என்ற நிலையை உருவாக்கினால், வெற்றி நம் கதவைத் தானாக ஓடிவந்து தட்டுமே!

தமிழ்நாட்டில் பார்ப்பனர் (ஜெயலலிதா) முதல்வராக வர முடிந்ததுகூட திராவிடர் இயக்கத்தின் பிச்சை - எம்.ஜி.ஆர். செய்தவற்றின்மூலம்தானே. அவரையே வைத்து திராவிடர் கழகம் சமூகநீதிக் களத்தில் வேலை வாங்க முடிந்தது எதனால்?

இது பெரியார் பூமியே!

பெரியார் பூமி, பெரியார் மண் இது.


திராவிடப் பேராயம் உணர்வு கொப்பளிக்க - இன்றும் தவறாத மண் - வாடைக் காற்றைவிடாது; தென்றலையே வரவேற்கும் மண் என்பது ஒரு நூறாண்டுகால சமூகநீதியைக் காத்து வரும் பூமி. வடக்கே பெரியார் இல்லையே என்ற காமராசரின் அன்றைய கவலை இன்றும் அதன் முக்கியத்துவம் புரிகிறதல்லவா?


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT