ADVERTISEMENT

முல்லை பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு குழாய் மூலம் தண்ணீர்! தேனி விவசாயிகள் எதிர்ப்பு!!

11:34 AM Sep 18, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குழாய் மூலம் மதுரைக்கு தண்ணீர் கொண்டுசெல்ல தேனி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துவருவதுடன் மட்டுமல்லாமல் போராட்டம் நடத்தவும் தயாராகி வருகிறார்கள்.

தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைந்துவருகின்றனர். மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. 152 அடி உயரம் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி தற்போது 142 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் இரு போகம் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. முதல்போக பாசனத்துக்கு தண்ணீர் ஜூன் மாதம் முதல் வாரத்தில் திறக்கப்படும் நிலையில் பருவமழை தாமதம் ஆனதான் காரணமாக கடந்த சில வருடங்களாகவே ஜூலை மாதத்தில்தான் தண்ணீர் திறக்கப்படுகிறது.

மதுரை மாநகர குடிநீருக்காக வைகை அணையில் இருந்து தற்போது தினசரி 72 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் குறையும்போது முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு நீர்மட்டம் உயர்த்தப்படுகிறது. இந்த நிலையில் அதிகரித்துவரும் மதுரை மாநகர மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டும் லோயர் கேம்பில் இருந்து ராட்ச குழாய் அமைக்கப்பட்டு ஆண்டிபட்டி வழியாக மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த சில மாதங்களாகவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அதற்கான பணிகளை தொடங்கி வருகின்றனர்.

இதற்கான மதிப்பீடு நிதியும் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்க உள்ளன. ஆனால், இதற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வரும் முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இது குறித்து ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து சென்றால் தேனி மாவட்டத்திற்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும் மேலும் மற்ற மாவட்ட விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள் குறைந்த காலத்திற்கு மட்டும் இத்திட்டம் செயல்படுத்துவதற்காக அதிகாரிகள் தெரிவிப்பதால் இதற்கான தொகையும் வீணாகும் சூழல் உள்ளது. எனவே இதனை அரசு கைவிட வேண்டும் இல்லை என்றால் விவசாயிகளை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். ஏற்கனவே இத்திட்டத்தை கண்டித்து தேனி மாவட்டம் முழுவதும் விவசாயிகள் சங்கத்தினர் கண்டன சுவரொட்டி ஒட்டி தங்கள் எதிர்ப்பையும் தெரிவித்துவருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT