ADVERTISEMENT

2 டாஸ்மாக் கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல்! 

04:00 PM Mar 16, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

கோப்புக்காட்சி

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற் கூடங்கள் போன்றவை சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வரி எனப் பல கோடி ரூபாய் வரி வசூல் பாக்கி வைத்துள்ளன. விருத்தாசலம் நகராட்சி தலைவர் சங்கவி முருகதாஸ், நகராட்சி ஆணையாளர் சேகர் தலைமையில் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் வரி பாக்கி வைத்துள்ள வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று வரி வசூல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதேபோல் விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் 8 டாஸ்மாக் கடைகளில் 2002 முதல் 2023 இதுவரை தொழில்வரி கட்டாமல் இயங்கி வந்தன. அதன்படி ஒவ்வொரு கடைக்கும் வருடத்திற்கு ரூ. 2280 என 21 வருடங்களுக்கு 34 ஆயிரத்து 515 ரூபாய் தொழில் வரி கட்டாமல் பாக்கி இருந்து வந்தது. இக்கடைகளுக்கு தொழில் வரி கட்ட பலமுறை எச்சரித்தும் நோட்டீஸ் அனுப்பியும் கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் நகராட்சி ஆணையர் சேகர் தலைமையிலான அதிகாரிகள் விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை மற்றும் ரயில் நிலையம் அருகில் உள்ள நாச்சியார்பேட்டை டாஸ்மாக் கடைகளை மூடி சீல் வைத்தனர். தொடர்ந்து தொழில் வரியை கட்டிய பிறகு சீல் அகற்றப்படும் என தெரிவித்துவிட்டு சென்றனர். மேலும் மீதமுள்ள கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என எச்சரித்து விட்டு சென்றனர். இதேபோல் ஆலடி ரோட்டில் உள்ள செராமிக் தொழிற்சாலை ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 812 ரூபாய் பாக்கி, ஜங்ஷன் ரோட்டில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் ஜப்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் வரி கட்டுவதற்கு கால அவகாசம் கேட்டதன் பேரில் அவர்களை எச்சரித்து விட்டு சென்றனர்.

தொடர்ந்து இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சேகர் கூறும்போது, "விருத்தாசலம் நகராட்சியில் குடிநீர் வரி, சொத்து வரி, காலி மனை வரி, தொழில் வரி, கடை வாடகை என நகராட்சிக்கு செலுத்த வேண்டிய பாக்கி நிலுவைத் தொகை உள்ளது. அதனை வசூலிப்பதற்கான பணியில் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அனைவரும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவை தொகைகளை உடனடியாக செலுத்தி ஒத்துழைப்பு தர வேண்டும். இல்லையென்றால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, சீல் வைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் நகராட்சி நிர்வாகம் ஈடுபடும்" எனத் தெரிவித்தார்.

நகராட்சி வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன், துப்புரவு அலுவலர் பூபதி மற்றும் உதவி ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட நகராட்சியினர் பலர் உடன் இருந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT