Boy child passes away in bike accident Struggle to remove government liquor store!

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்துள்ள தே. கோபுராபுரம் கிராமத்தைச் சேர்ந்த சற்குணம் என்பவரின் மனைவி மஞ்சுளா (30), அவரது மகன் அஜய் (8), மகள் அஜிதா (2). அதே பகுதியைச் சேர்ந்த வீரப்பன் மனைவி செந்தாமரை (43) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் (06.12.2021) மாலை தே. கோபுராபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

Advertisment

அப்போது செம்பளக்குறிச்சியிலிருந்து தே. கோபுராபுரம் நோக்கி செம்பளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தனபால் என்பவரின் மகன் ராஜேஷ்குமார் (19) மதுபோதையில் அவரது நண்பர்களுடன் பைக்கில் அதிவேகமாக வந்துள்ளார். அப்போது சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்த மஞ்சுளா, அஜித், அஜிதா, செந்தாமரை ஆகியோர் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. அதில் சிறுவன் அஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூவரும் படுகாயமடைந்தனர். சிறுவன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. படுகாயமடைந்த மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

Advertisment

இந்த நிலையில், அஜய்யின் உறவினர்கள் அஜய் உடலை வாங்க மறுத்து விருத்தாசலம் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலின்போது அவர்கள், “விபத்து நடந்த இடத்திற்கு அருகில் அரசு மதுபான டாஸ்மாக் செயல்படுகிறது. அதன் காரணமாக மதுபோதையில் வாகனத்தை இயக்கி இந்தச் சாலையில் அவ்வப்போது விபத்துகள் நடக்கின்றன. அப்படித்தான் சிறுவன் அஜய் உயிரிழந்தான். அதனால், தே. கோபுராபுரம் பகுதியில் செயல்படும் மதுபானக்கடையை மூட வேண்டும்’ என வலியுறுத்தினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, டாஸ்மாக் கடையை மூடுவது குறித்து கோட்டாட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

Boy child passes away in bike accident Struggle to remove government liquor store!

அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடைவீதியிலிருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்று கோட்டாட்சியர் ராம்குமாரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் ராம்குமார், 3 நாட்களுக்குள் தே. கோபுராபுரம் மதுபானக்கடையை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் சிறுவனின் உடலைப் பெற்றுக்கொண்டு, போராட்டத்தைக் கைவிட்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் விருத்தாசலம் - சேலம் சாலை, விருத்தாசலம் - திருச்சி சாலைகளில் அரைமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.