ADVERTISEMENT

காட்டம்பட்டி காயத்திரியின் வெற்றியைக் கொண்டாடும் பொன்ராஜ்!- கலாமின் கனவுக்கான முதல் விதையாம்!

09:04 PM Jan 03, 2020 | santhoshb@nakk…

“AKVIP- யின் ஒரே பஞ்சாயத்து- ஒரே தலைவர்- ஊராட்சி தேர்தல் - 100% வெற்றி” என, குதூகலிக்கிறார் அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சியின் தலைமை வழிகாட்டியான பொன்ராஜ்.

ADVERTISEMENT

“ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்பார்கள் அல்லவா! அந்த மாதிரி வெற்றி அல்ல இது!”எனச் சொல்லும் பொன்ராஜ், “காட்டம்பட்டி பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட காயத்திரி பாலகிருஷ்ணன் எம்.பி.ஏ., நேர்மையாக மக்களைச் சந்தித்து, ஒரு அறிவார்ந்த கிராம மறுமலர்ச்சி என்பது அப்துல்கலாம் புரா திட்டத்தால் நிறைவேறும் என்பதை எடுத்துச் சொல்லி, வெற்றி பெற்றிருக்கிறார். புரட்சியின் தொடக்கமானது 2020, ஜனவரி 2- இல் ஆரம்பித்துவிட்டது.”என்கிறார்.

ADVERTISEMENT


“வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கமாட்டோம் என்று அறிவித்தே போட்டியிட்டார் காயத்திரி பாலகிருஷ்ணன். ஊழல் அரசியல், ஓட்டுக்குப் பண அரசியல், பிரிவினை அரசியல், சாதி அரசியல் ஆகியவை கடந்த 18 ஆண்டுகளாக தமிழகத்தைப் பீடித்துள்ளது. இதனை எதிர்த்து அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் படை களமிறங்கியது. சுயேச்சையாக கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் ஒன்றியம், காட்டம்பட்டி பஞ்சாயத்தில் ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து, கலாமின் கனவை, லட்சியத்தை விதைத்து, மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து, பிரச்சனைகளுக்கான தீர்வைச் சொல்லி, ஓட்டுக்குப் பணம் என்ற எண்ணத்தை மாற்றி, மக்கள் ஆதரவோடு, 18 ஆண்டு கால ஊழல் ஊராட்சியை மாற்றி, நேர்மையோடு மக்களின் எண்ணத்தை வென்றெடுத்து, 5000 வாக்குகளில் 448 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் காயத்திரி பாலகிருஷ்ணன். ஓட்டுக்கு பணம், வீட்டிற்கு ஒரு மூட்டை நெல் கொடுத்து ஓட்டு கேட்ட காட்டம்பட்டி பஞ்சாயத்தில், வெறும் ரூ.85000 செலவில் முறியடித்துப் பெற்ற வெற்றிதான் இது.


தமிழகத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு 50 சதவீத இளைஞர்கள் அப்துல் கலாமின் கனவைச் சுமந்து, அவர் படத்தைச் சுமந்து தேர்தலில் நின்றார்கள். பல்வேறு இடங்களில் அவர்கள் வென்று இருக்கிறார்கள், பல்வேறு இடங்களில் பணபலத்தால், சாதி பலத்தால், கட்சி பலத்தால் தோற்றும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒருங்கிணையும் காலம் வரும். 2020- ஆம் ஆண்டில், கலாமின் கனவுக்கான முதல் விதை காட்டம்பட்டி போன்ற பல பஞ்சாயத்துக்களில் விதைக்கப்பட்டுள்ளது. இந்த விதை அப்துல் கலாம் புரா திட்டத்தை முன்னெடுத்து, அவர் கொடுத்த தற்சார்பு பொருளாதரத்தை செயல்படுத்தும்.”என்றார்.


பொன்ராஜ் பார்வையில், காட்டம்பட்டி பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காயத்திரி பாலகிருஷ்ணன், நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிகிறார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT