Skip to main content

திருநீறு பூசி அமைச்சர் மிரட்டியும் அலட்சியமோ அலட்சியம்!- துரோகத்தால் வீழ்ந்த விருதுநகர் மாவட்ட அதிமுக!

விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட பஞ்சாயத்துகளில் 65 சதவீத இடங்களில் வெற்றி பெற முடிந்த அதிமுக, ஒன்றியங்களுக்கான தேர்தலில் வெறும் 11 சதவீத வெற்றியே பெற்றது. இரட்டை இலை வாக்காளர்களை அமமுக கவர்ந்தது, அதிமுகவில் இருந்தபடியே ஜாதி அடிப்படையில் ஒரு பிரிவினர் எதிராகச் செயல்பட்டது, பல ஒன்றியங்களில் வேட்பாளர் தேர்வில் கட்சியினரிடம் ஏற்பட்ட அதிருப்தி என எல்லாம் சேர்ந்து, ‘அதிமுக பெல்ட்’ எனச் சொல்லப்படும் விருதுநகர் மாவட்டத்தில், ஒன்றியங்களுக்கான தேர்தலில் திமுகவுக்கு 83 சதவீத வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறது.

இந்த மாவட்டத்தில் அதிமுக இன்னும்‘ஸ்ட்ராங்’ஆகத்தான் இருக்கிறது என்பதற்கு 20-க்கு 20-ல் வென்ற வெம்பக்கோட்டை ஒன்றியத்தை உதாரணமாகச் சொல்லலாம். தமிழகத்திலேயே, 100 சதவீத வெற்றி பெற்ற ஒரே ஒன்றியம் இதுதான். இந்த ஒன்றியத்தில், சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன் காட்டிய தீவிரத்தை, மற்ற ஒன்றியங்களில் யாரும் பெரிதாகக் கடைப்பிடிக்கவில்லை. 

VIRUDHUNAGAR DISTRICT ADMK  PARTY LEADER MINISTER RAJENDRA BALAJI


தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவுக்குப் போகவேண்டிய ஒன்றியங்களை, கவுன்சிலர் தலைகளுக்கு விலைபேசி கைப்பற்ற முயற்சித்தது ஆளும்கட்சி. அது சரிவர நடக்காததால், வத்திராயிருப்பு, நரிக்குடி, ராஜபாளையம், சாத்தூர் ஆகிய நான்கு ஒன்றியங்களில் ஆட்களை ஏவிவிட்டு ரகளை செய்து, திட்டமிட்டு தேர்தலை தள்ளிவைக்கச் செய்தனர். நரிக்குடியிலோ, மணல் மாபியா என்று சொல்லப்படும் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் ஏற்பாட்டில், கல்வீச்சு, ஒன்றிய அலுவலகம் சூறை என பேயாட்டம் ஆடி, டி.எஸ்.பி. வெங்கடேசனின் கையை  அரிவாளால் கீறியும் விட்டனர்.  

VIRUDHUNAGAR DISTRICT ADMK  PARTY LEADER MINISTER RAJENDRA BALAJI“அது ரொம்ப துடியான சாமி.. சக்தி வாய்ந்த கோயில்ல இருந்து திருநீறு வாங்கிட்டு வந்திருக்கேன்.. பூசிக்கங்க.. ஓட்டு போடும்போது கட்சிக்கு எதிரா வேலை பார்த்தீங்கன்னா.. கை, கால் வெளங்காம போயிரும்..”என்று குற்றாலத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கவுன்சிலர்களிடம் மிரட்டல் அஸ்திரத்தை எடுத்துவிட்ட விருதுநகர் அதிமுக மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி, விருதுநகரில் வைத்து கவுன்சிலர்களிடம் “யாராரு என்னென்ன பண்ணுறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். தேர்தலப்ப ஏதாச்சும் கோல்மால் பண்ணுனீங்கன்னா.. நீங்க சேர்த்து வச்சிருக்கிற சொத்து எல்லாத்தயும்  எழுதி வாங்கிருவேன்..” என்று கோபாவேசம் காட்டியிருக்கிறார். ஆனாலும், தனது சொந்தத் தொகுதியிலேயே, சிவகாசி ஒன்றியத்தை திமுகவிடம் பறிகொடுத்திருக்கிறார். 


குடும்பங்களின் பிடியில் ஒன்றியங்கள்!

“கட்சிக்காக உழைச்சேன்; போராடியிருக்கேன்; ஜெயிலுக்குப் போனேங்கிறதெல்லாம் சீட் கொடுக்கிறதுக்கான தகுதியில்ல. எப்படி சம்பாதிச்சாலும் கவலையில்ல. வீட்டுல மூட்டை மூட்டையா பணம் வச்சிருக்கியா? எதிர்ல நிக்கிறவனைக் காட்டிலும் நெறய பணம் செலவழிப்பியா?”என்று கேட்டு, வேட்பாளரின் வெயிட்டைப் பார்த்து, சீட் தந்ததாலோ என்னவோ, அதிமுகவிலும் திமுகவிலும் குறிப்பிட்ட குடும்பத்தினரின் கைகளுக்கு சில ஒன்றியங்கள் போயிருக்கின்றன.

VIRUDHUNAGAR DISTRICT ADMK  PARTY LEADER MINISTER RAJENDRA BALAJI
திமுக வசமான சிவகாசி ஒன்றியத்தில், தலைவர் நாற்காலியில் முத்துலட்சுமியையும் துணைத் தலைவர் இருக்கையில் அவருடைய கணவர் விவேகன்ராஜையும் கைகோர்த்து அமரச் செய்திருக்கிறது இந்தத் தேர்தல். நரிக்குடி ஒன்றியத்தில் 14- வது வார்டு கவுன்சிலர் ரவிச்சந்திரன். அவருடைய மனைவி அங்காள ஈஸ்வரி அதே ஒன்றியத்திலுள்ள வேளானூரணி ஊராட்சி மன்றத் தலைவர். நரிக்குடி 13- வது வார்டு திமுக கவுன்சிலர் குமராயி, 12- வது வார்டு அதிமுக கவுன்சிலர் இந்திராணி ஆகிய இருவரும் ரவிச்சந்திரனின் குடும்பச் சொந்தங்களே. 


குப்புறக் கவிழ்த்த குடியுரிமைச் சட்டம்!

எப்போதும், இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான், நரிக்குடி ஒன்றியத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்று, 10- வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் ஆவார். அந்த உறுப்பினர், ஆளும் கட்சியாக எந்தக் கட்சி உள்ளது? நரிக்குடி ஒன்றியத்தில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் தலைவர் பொறுப்பை ஏற்பார்கள்? என்றெல்லாம் சீர்துக்கிப் பார்த்து, அந்தக் கட்சிக்கு ஆதரவு தருவது வழக்கமான நடைமுறையாக இருந்தது. குடியுரிமைச் சட்டத்துக்கு அதிமுக தந்த ஆதரவால் எரிச்சலாகி, இந்த தடவை வெற்றிபெற்ற முகமது கோஸ், தங்கள் சமுதாயத்தினரோடு ஆலோசனை நடத்தி, திமுக ஆதரவு நிலை எடுத்தார். சுயேச்சை வேட்பாளரான முகமது கோஸ் எடுத்த இந்த முடிவினால்தான், நரிக்குடி யூனியன் அலுவலகத்தில் அதிமுகவினர்  தகராறு செய்தனர். தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டது.  


ஆளும் கட்சியினருக்கு அடிபணிந்து சேவகம்!

‘எதிர் முகாமில் உள்ள கவுன்சிலர்களை இழுக்க வேண்டும். அதற்கு வசதியாக தேதி குறிப்பிடாமல் தேர்தலை ஒத்தி வையுங்கள்.’ என ஆளும்கட்சியினர் போட்ட உத்தரவுக்கு, அப்படியே அடி பணிந்தார்கள், இந்த மாவட்டத்தில் நான்கு ஒன்றியங்களில் தேர்தலை நடத்திய அதிகாரிகள்.

VIRUDHUNAGAR DISTRICT ADMK  PARTY LEADER MINISTER RAJENDRA BALAJI


ராஜபாளையம் ஒன்றிய அலுவலகத்தில் தேர்தலை நடத்திய அதிகாரி செல்வகுமாருக்கு, திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு, ஆம்புலன்ஸில் அவரைத் தூக்கிச் சென்ற கூத்தெல்லாம் நடந்தது. தேர்தல் தேதி குறித்து மறு அறிவிப்பு செய்வதற்குள், ஆளும் கட்சியினர் போட்ட திட்டத்தை நிறைவேற்றும் விதமாக, நரிக்குடி ஒன்றிய 4- வது வார்டு திமுக கவுன்சிலர் போஸ், அதிமுக ஆதரவு நிலை எடுத்திருக்கிறார். 


அதிமுகவினர் ஆட்டத்தை வேடிக்கை பார்த்த திமுகவினர்!

இந்தத் தேர்தலில் பல ஒன்றியங்களில், அதிமுகவினர் ஆடிய ஆட்டத்தை விருதுநகர் மாவட்ட திமுகவினர், தள்ளிநின்று வேடிக்கை மட்டுமே பார்த்த நிலையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். “தோல்வி பயத்தால் அதிமுகவினர் செய்த ரகளையைக் காரணம் காட்டி, தேர்தலை ரத்துச் செய்தது கண்டனத்துக்குரியது.

VIRUDHUNAGAR DISTRICT ADMK  PARTY LEADER MINISTER RAJENDRA BALAJI


இந்த மாவட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அறிவுறுத்தலின்படியே, யூனியன் தேர்தலில் ரகளை நடந்தது. இந்த மறைமுகத் தேர்தலுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், போலீஸ் அதிகாரியும், காவல்துறை நிர்வாகமும்  உரிய பாதுகாப்பு அளிக்க இயலவில்லை என்று தெரிவிப்பது வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது.”என்றார்.  

காலம் திரும்பும் என திமுக காத்திருக்கிறது போலும்!  


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்