ADVERTISEMENT

அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான கட்சி நிர்வாகியின் கையில் அருவா! - விருதுநகர் மாவட்ட வில்லங்க காமெடி!

05:49 PM Oct 23, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதிய நிர்வாகிகள் என 800 பேர் வரை நியமிக்கப்பட்ட விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவில், சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனின் ஆதரவாளர்களில் ஒருவருக்குக்கூட இடமில்லாமல் செய்துவிட்டார், விருதுநகர் மாவட்ட பொறுப்பாளரான கே.டி.ராஜேந்திரபாலாஜி. அதனால், எம்.எல்.ஏ. தரப்பு டென்ஷனாக இருக்கிறது என்று பேசப்படும் நிலையில், ராஜவர்மனின் ஆதரவாளரான, நரிக்குடி அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் தியாகராஜன், நீளமான அரிவாள் ஒன்றை கையில் வைத்திருப்பது போன்ற படங்களை, பெயர் சொல்ல விரும்பாத ஆளும்கட்சி நிர்வாகி ஒருவர், நமக்கு அனுப்பிவைத்தார்.



தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என ராஜவர்மன் எம்.எல்.ஏ., அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது குற்றம் சாட்டியிருக்கும் நிலையில், பேரவை ஒன்றிய செயலாளர் தியாகராஜன் அரிவாளோடு உள்ள போட்டோக்களை அனுப்பிய அந்த நிர்வாகி ‘யாரை மிரட்டுவதற்கு இந்த போட்டோ?’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார். ராஜேந்திரபாலாஜி மீதான ஆத்திரத்தை வெளிப்படுத்தவே, தியாகராஜன் அரிவாளைக் கையிலேந்தி, விதவிதமாகப் போட்டோ எடுத்து, வாட்ஸ்-ஆப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருக்கிறார். அமைச்சருக்கு எதிராக, ராஜவர்மன் தரப்பினரும், வீரதீரத்தைக் காட்டத் தொடங்கிவிட்டதாக நரிக்குடி வட்டாரத்தில் பேசுகின்றனர் என்று கொளுத்திப் போட்டார்.


ராஜவர்மன் எம்.எல்.ஏ.வை தொடர்புகொண்டோம். “தியாகராஜன் கையில் அரிவாளா? ஆச்சரியமா இருக்கு. அவரை மாதிரி ஒரு அப்பாவிய பார்க்கவே முடியாது. ஒருவேளை முள் வெட்டுறதுக்காக அரிவாளைக் கையில் எடுத்திருக்கலாம்.” என்று ’ஜோக்’ அடித்துவிட்டு சிரித்தார்.


அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் தியாகராஜனிடம் பேசினோம். “அந்த போட்டோ, ஆவாரங்குளத்துல உள்ள என்னோட தோட்டத்துல எடுத்தது. நான் யாரையும் மிரட்டல. கட்டபொம்மன் நாடகத்துல வர்ற வெள்ளையம்மா பாட்டை பாடிக்கிட்டு, அரிவாளை கையில வச்சிருந்தப்ப எடுத்தது. அந்த அருவா, தகடு மாதிரி வளையும். இது ஒண்ணும் சீரியஸான விஷயம் இல்லீங்க.” என்று சிரித்தார்.

வெட்டு, குத்து, கொலை மிரட்டல் என்று விவகாரமாகப் பேசினாலும், விருதுநகர் மாவட்ட ஆளும்கட்சியினரின் அரசியல் என்னவோ, காமெடியாகவே இருக்கிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT