Skip to main content

‘அடிக்கச் சொன்னார், அடித்தார்கள்!’ - ராஜேந்திரபாலாஜி மீது வழக்கு!

Published on 25/09/2021 | Edited on 25/09/2021

 

Case filed on Rajendrabalaji

 

உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையின்போது விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவல்சூரங்குடியில், விருதுநகர் அதிமுக மேற்கு மா.செ. ராஜேந்திரபாலாஜி அளித்த தடபுடல் வரவேற்பை ஏற்றுக்கொண்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சாத்தூரைக் கடந்தபிறகு, அங்கே நிர்வாகிகளுக்கிடையே கைகலப்பாகி, அதிமுக நகரச் செயலாளர் இளங்கோ அளித்த புகாரின் பேரில், சாத்தூர் டவுண் காவல் நிலையத்தில் வழக்கு பதிவானதைத் தொடர்ந்து, ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவாகியிருக்கிறது.

 

என்ன செய்தாராம் ராஜேந்திரபாலாஜி?

 

சாத்தூர் கிழக்கு ஒன்றியம் ஏ.ராமலிங்காபுரம் அதிமுக கிளைச் செயலாளர் வீராவுரெட்டி அளித்த புகாரில், ‘நான் சாத்தூர், வெங்கடாசலபுரம் கிழக்கு, புது பஸ் ஸ்டாப்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.கே. ரவிச்சந்திரனுடன் நின்றுகொண்டிருந்தேன். அப்போது, ராஜேந்திரபாலாஜி காரிலிருந்து இறங்கி, என்னை அடித்துக் காரில் போடச் சொன்னதும், அவருடைய ஆதரவாளர்கள் ராசு, ஹரிசுதன் என்ற மணி, ஐ.டி.விங் பாண்டியராஜ், மேலும் 5 பேர் என்னை மாறி மாறி கையால் அடித்து, எங்கும் தப்பித்து ஓடவிடாமல் வழிமறித்து, ஸ்கார்பியோ காரில் ஏற்றினார்கள். காருக்குள் இருந்த மாரிக்கனி மற்றும் மணி ஆகியோர் என்னை அசிங்கமாகப் பேசி, கையால் கன்னத்தில் அறைந்தார்கள். எங்கள் கட்சிக்காரர்கள் வந்தவுடன், காரிலிருந்து என்னை இறக்கிவிட்டு, உன்னைக் கொல்லாமல் விடமாட்டோம் என்று கொலை மிரட்டல் விடுத்தார்கள்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

 

மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் புகார் என அடிதடி அரசியலை, விருதுநகர் மாவட்டத்தில் கையில் எடுத்திருக்கின்றனர் அதிமுகவினர்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.