ADVERTISEMENT

மின் கம்பத்தில் கட்டி பெண் மீது தாக்குதல்: சிகிச்சை அளிக்காமல் வெளியேற்றிய மருத்துவமனையை கண்டித்து  போராட்டம்

04:39 PM Jul 22, 2019 | rajavel

ADVERTISEMENT

விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி செல்வி. (வயது 45). இவரது மகன் பெரியசாமியும், அதே பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி (வயது 60) என்பவரது மகள் பவுலியும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எங்கேயோ சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 18ந் தேதி மாலை செல்வி, வேலு என்பவரின் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

அப்போது அங்கு வந்த கொளஞ்சி, ஏன் என் மகளை உன் மகன் இன்னும் வீட்டிற்கு அழைத்து வந்து விடவில்லை எனக் கூறி செல்வியை அசிங்கமாகத் திட்டி அங்கு இருந்த மின்கம்பத்தில் அவரை கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று செல்வியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கொளஞ்சி மீது அசிங்கமாக திட்டி தாக்கியதாக மட்டும் வழக்குப்பதிவு செய்து அன்றே கொளஞ்சியை பெயிலில் விடுதலை செய்து விட்டனர்.

இந்நிலையில் செல்வியை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த புகைப்படத்தை பார்த்த சமூக ஆர்வலர்கள் மற்றும் மாதர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வியை சந்தித்து ஆறுதல் கூறினர்.


இதனிடையே செல்வியின் மகனும், கொளஞ்சியின் மகளும் சென்னையில் திருமணம் செய்துகொண்டு தங்கி இருந்ததாக தெரிகிறது. திருமணம் முடிந்து நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டு இருவரும் விருதாச்சலம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, பவுலியை பெரியசாமியுடன் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் செல்வியை தாக்கியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட மாதர் சங்கத்தினர் முடிவு செய்திருந்தனர்.


நேற்று காலையில் திடீரென அரசு மருத்துவமனையில் இருந்து செல்வி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் அவரது உடல் முழுவதும் குணமடையவில்லை என கூறி செல்வி மருத்துவமனையை விட்டு வெளியேறி மருத்துவமனை வளாகத்திலேயே வலி தாங்க முடியாமல் கதறி அழுது கொண்டிருந்தார். மேலும் அவரது கையில் குத்தப்பட்டிருந்த ஊசியும் அகற்றப்ப படாமல் அவசரம் அவசரமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் அசோகன் தலைமையில் மாதர் சங்கத்தினர் மற்றும் செல்வியின் உறவினர்கள் விருதாச்சலம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்தும், விருத்தாச்சலம் போலீஸாரின் மெத்தனப் போக்கை கண்டித்தும் செல்வியுடன் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்தும், போலீசாரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் கிடைத்த விருத்தாசலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும் விருத்தாசலம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் செல்விக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி அவரை சிகிச்சைக்காக மருத்துவமனை உள்ளே அழைத்துச் சென்றனர். அதன்பேரில் போராட்டத்தைக் கைவிட்ட மாதர் சங்கத்தினர் போலீசாரின் மெத்தனப் போக்கை கண்டித்தும், செல்விக்கும், செல்வியின் மகன் பெரியசாமி மற்றும் பவுலிக்கும், உரிய பாதுகாப்பு வழங்க கோரியும், செல்வியை தாக்கிய கொளஞ்சி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் விருத்தாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.



பாதிக்கப்பட்ட செல்வியும் அவரது மகள் அம்புஜவல்லி ஆகிய இருவரையும் சந்தித்தோம். அவர்கள் நம்மிடம், நாங்கள் ஒரே ஊர் ஒரே சாதி தான். இருந்தும் நாங்கள் ஏழை என்பதால் பெண்ணோட அப்பா கொளஞ்சி எங்களை தொடர்ந்து மிரட்டி வந்தார். அவரது மகளும், என் தம்பியும் காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதால் அவர்கள் இருக்கும் இடம் எங்களுக்கு தெரியாது. ஆனாலும் கொளஞ்சி என் அம்மாவையும் எங்களையும் மிரட்டினார். காதலர்கள் ஒப்படைக்க சொல்லி கட்டப் பஞ்சாயத்து செய்தார்.

அவரது மகள் பவுலி அவங்க அப்பாவிடம் செல்போன் மூலம் கடந்த வாரம் பேசியுள்ளார். ''பெரியசாமியை நான் விரும்பினேன் திருமணத்திற்கு நீங்கள் சம்மதிக்காததால்தான் ஊரை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து கொண்டோம். எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம்'' என்று சொன்ன பிறகும், என் தாயாரை கொளஞ்சியை மின்சார கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கியதோடு, அவரது புடவையை உருவி ஜாக்கெட்டை கிழித்ததோடு தொடக்கூடாத இடத்தில் எல்லாம் கை வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். ஊரார் கேட்டபோது உங்க வீட்டு பெண்களையும் இப்படி தான் செய்வேன் என்று மிரட்டியதால் பயந்து கொண்டு ஊரில் யாரும் கேட்கவில்லை.


யாரோ போலீசுக்கு தகவல் சொல்ல போலீஸ் வந்து அவிழ்த்து விட்டது. இரண்டரை மணி நேரம் சித்திரவதைக்கு பிறகு அப்படிப்பட்ட மனிதன் மீது புகார் கொடுத்தும் போலீல் அவரை கைது செய்யவில்லை. உடல் நிலை பாதிக்கப்பட்ட என் தாயாரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தோம். அவர்களும் சிகிச்சை தர முடியாது என்று மருத்துவமனையை விட்டு வெளியே துரத்தி விட்டனர். ஏழையான எங்களுக்கு உதவிட யாருமே இல்லையா? என கதறுகிறார்கள் செல்வியும் அவரது மகள் அம்புஜவல்லியும். இவர்களது நிலையை பார்த்து விட்டு சிபிஎம் வட்டச் செயலாளர் அசோகன், அவருடன் மாதர் சங்க பெண்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஏழைக்கு நீதி எப்போது கிடைக்கும் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT