
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ் உத்தரவின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா தலைமையில் தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டபோது, புதுப்பேட்டை பகுதியில் உள்ள தினேஷ்குமார் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் சந்தேகத்திற்கு இடமாகவும், முன்னுக்குப் பின் முரணாகவும் தகவல் அளித்ததால் தீவிர விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது தினேஷ்குமார்க்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் இருந்து ஒன்றரை லட்சம் மதிப்பிலான, தடை செய்யப்பட்ட புகையிலை கொண்ட 21 மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர், பறிமுதல் செய்த புகையிலை மூட்டைகளை விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் விஜயரங்கனிடம் ஒப்படைத்தனர். மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்த தினேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.ஒன்றரை லட்சம் மதிப்பிலான அரசு தடை செய்யப்பட்ட 27 புகையிலை மூட்டைகள் மறைத்து வைத்திருந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)