/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/attur545.jpg)
தலைவாசல் அருகே, ஒருதலையாக காதலித்து வந்த இளம்பெண்ணுடன் விவசாயி ஒருவர் குடும்பம் நடத்தி வருவதால் ஆத்திரம் அடைந்த வாலிபர், கூட்டாளியுடன் சேர்ந்து அவர்களை இரும்பு கம்பி, அரிவாளால் சரமாரியாக தாக்கிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள வரகூரைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). விவசாயி. ரமேஷூக்கும், அவரின் மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.
ரமேஷூன் தோட்டத்தில் கல்வராயன் மலை மொரப்பங்காடு பகுதியைச் சேர்ந்த கவிதா (வயது 28) என்பவர் வேலை செய்து வருகிறார். இதில் ஏற்பட்ட நட்பு, அவர்களுக்குள் காதலாக மலர்ந்துள்ளது.
இதையடுத்து ரமேஷ், கவிதாவை தன் வீட்டுக்கே அழைத்துச்சென்று தாலி கட்டாமல் குடும்பம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 12) வீட்டில் அவர்கள்¢ இருவரும் இருந்தபோது, இரண்டு வாலிபர்கள் அரிவாள், இரும்பு கம்பி ஆகிய ஆயுதங்களுடன் அங்கு வந்தனர்.
அவர்கள் இருவரும் ரமேஷையும், கவிதாவையும் சரமாரியாக தாக்கினர். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் வாலிபர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
ஆபத்தான நிலையில் இருந்த அவர்கள் இருவரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து தலைவாசல் காவல்நிலைய காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான கவிதாவை, ஏற்கனவே ஒரு வாலிபர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் ரமேஷ், தான் காதலித்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதை சகித்துக் கொள்ள முடியாமல் தனது கூட்டாளியுடன் சேர்ந்து அந்த வாலிபர் ரமேஷையும், கவிதாவையும் கொலை செய்யும் நோக்குடன் தாக்குதல் நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)