ADVERTISEMENT

அரசு தரப்பு வழக்கறிஞர்  சாட்சிகளை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் நீதி கிடைக்குமா?  சிறுமி பலாத்கார வழக்கில் மாதர் சங்கம் கேள்வி

11:16 PM Dec 08, 2018 | Anonymous (not verified)


அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாநில தலைவர் எஸ்.வாலண்டினா, பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ADVERTISEMENT

’’விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் இளந்திரை என்ற கிராமத்தைச் சேர்ந்த சிவபாலு (வயது-22, த/பெ அய்யனார்) என்பவர் பெரம்பலூர் மாவட்டம் மணகுப்பம் கிராமத்தில் வசிக்கும் 16-வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி 16.11.17 அன்று கடத்திச் சென்று பலாத்காரம் செய்த வழக்கு பாக்சோ சட்டப் பிரிவின் கீழ் பெரம்பலூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ADVERTISEMENT

10.10.18 அன்று வழக்கு விசாரணைக்கு வரும் சூழலில் 9.10.2018 அன்று இவ்வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞரான ஜி.சித்ராதேவி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சாட்சியான சிறுமியிடமும் அவரது தாயாரிடமும் சிவபாலுவை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தங்களுக்கு எதுவும் நடைபெறவில்லை என்று கூற வேண்டும் என வற்புறுத்தி உள்ளார்.

பாக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடைபெற்று வருவது குறிப்பிடத் தக்கதாகும். இவ்வழக்கில் முக்கிய சாட்சியான சிறுமையை பாதுகாப்பது மிக முக்கியமான கடமை. ஆனால் சாட்சிகளை கலைத்து குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் அரசு தரப்பு வழக்கறிஞர் சித்ராதேவி நடந்து கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.


பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் வழக்குகளை துரிதமாக நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே குற்றங்களை தடுக்க முடியும். மேலும் சாட்சிகளை மிரட்டுவது, கடத்துவது, கொலை செய்வது போன்ற பல்வேறு சம்பவங்கள் பல முக்கிய வழக்குகளில் நடைபெற்று வருவதை பார்க்க முடியும்.

சாட்சிகளை பாதுகாப்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத் தருவது மிகமிக அவசியமான ஒன்றாகும். ஆனால் தமிழகத்தில் சாட்சிகளை பாதுகாப்பதற்கான போதுமான ஏற்பாடுகள் இதுவரை இல்லை. சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டம் பல நாடுகளில் உள்ளது. இதுவரை இந்தியாவில் உருவாக்கப்படவில்லை. தமிழகத்தில் தொடர்ந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டம் இயற்ற வேண்டுமென வலியுறுத்தி வருகிறது. ஆசாராம் பாபு ஆசிரமத்தில் நடந்த குழந்தைகள் பலாத்கார வழக்கில் சாட்சிகள் மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட அனைவரும் காவல்துறை, நீதித்துறை நம்பியே இருக்கிறார்கள். ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் சாட்சிகளை கலைத்து குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார்.


எனவே பெரம்பலூர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞராக இருக்கும் சித்ராதேவி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு ஒரு பொருத்தமான, திறமையான, வழக்கறிஞரை நியமித்து நீதி கிடைக்க ஆவன செய்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். வழக்கறிஞர்கள், காவல்துறையை சார்ந்தவர்களுக்கும், குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் போதுமான பயிற்சி அளித்து குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக வலியுறுத்துகிறோம்.


’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT