ADVERTISEMENT

பெரியகுளம் தூர்வாரும் பணிக்கு ரூ 1,52,535 நிதி வழங்கிய கிராம மக்கள்!

06:12 PM Aug 11, 2019 | kalaimohan

அரசாங்கம் செய்ய மறந்த நீர்நிலை சீரமைப்பு மராமத்துப் பணிகளை இளைஞர்கள் சொந்த செலவில் செய்து வருகின்றனர். இளைஞர்களின் இந்த முயற்சிக்கு கிராம மக்களும் துணையாக நிற்கிறார்கள். தங்களால் இயன்ற உதவிகளையும் செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பெரியகுளம் தூர்வாரும் பணிக்கு கடந்த 45 தினங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. 4 தாலுகாவைச் சேர்ந்த விவசாயிகள், இளைஞர்கள் கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் (கைஃபா) என்ற அமைப்பை தொடங்கி தங்கள் சொந்தப் பணத்தை கொண்டும், நன்கொடை மூலமாகவும் 565 ஏக்கர் கொள்ளளவு கொண்ட பெரியகுளத்தை தூர்வாரி வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

முதற்கட்டமாக ஏரியை தூர்வாரும் மண்ணைக் கொண்டு, கரையைப் பலப்படுத்தியும், வரத்துவாரிகளை சீரமைத்து, கரையோரங்களில் மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வருகின்றனர். தூர்வாரும் பணியில் பொக்லைன் இயந்திரம் மற்றும் டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தஞ்சை மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள், உயர்நீதி மன்ற நீதிபதி உள்ளிட்ட பலரும் நேரில் வந்து இளைஞர்களின் தூர்வாரும் பணியை பார்வையிட்டு பாராட்டிச் சென்றுள்ளனர். மேலும், தூர்வாரும் பணிக்கு பள்ளிச் சிறுவர்கள் முதல் தொழிலதிபர்கள், விவசாயிகள், வெளிநாடுகளில் பணியில் உள்ள இளைஞர்கள் என்று பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்காடு மக்கள் மற்றும் கொப்பிப் பொங்கல் விழாக்குழுவினர் இணைந்து வீடு வீடாக் சென்று சேகரித்த நிதியை குளம் தூர்வார இளைஞர்களிடம் வழங்கினார்.

அதேபோல இன்று ஞாயிற்றுக்கிழமை பழைய பேராவூரணி கிராமத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் எஸ்டி.டி.சிதம்பரம், எஸ்டி.டி.வெங்கடேசன், க.வேணுகோபால், தனபால், சௌ.சுதாகர், சௌ.சரவணன், ரெங்கசாமி, நீலகண்டன், கணபதி, தங்கராசு, முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் முக்கியஸ்தர்கள், தங்கள் கிராமத்தில் பொதுமக்களிடம் வசூலித்த தொகை ரூபாய் 1 லட்சத்து 52 ஆயிரத்து 535 ரூபாயை, கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ராம்குமார், கார்த்திகேயன், நவீன், நிமல் ராகவன், திருவேங்கடம் மற்றும் நிர்வாகிகளிடம் வழங்கினர்.

நிதியுதவியைப் பெற்றுக் கொண்ட கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க நிர்வாகிகள், தூர்வாரும் பணிக்காக பெருமளவில் நிதியுதவி அளித்த பழைய பேராவூரணி கிராமத்தினருக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் கிராம மக்களும், விவசாயிகள், இளைஞர்கள் தொடர்ந்து எங்களை ஊக்கப்படுத்தி வருவதால் தற்போது நெடுவாசல், நாடியம் போன்ற கிராமங்களிலும் குளங்கள் சீரமைக்கும் பணியை தொடங்கி உள்ளோம். விரைவில் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள், விவசாயிகளை இணைத்து கைஃபா வின் மூலம் அனைத்து கிராமங்களிலும் நீர்நிலைகளை சீரமைப்போம். மழை நீரை சேமித்து பயன்படுத்துவோம் நிலத்தடி நீரை சேமிப்போம் என்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT