publive-image

பல வருட காத்திருப்புக்கு பிறகு கடந்த சில வருடங்களாக காவிரித் தண்ணீர் ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்காக திறந்துவிடப்படுகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியும் நடக்கிறது. குறுவை சாகுபடிக்கு உழவடை மானியத்தையும் அரசு வழங்கி டெல்டா விவசாயிகளை உற்சாகப்படுத்திவருகிறது. அதேபோல இந்த வருடமும் ஜூன் 12ஆம் தேதி தமிழ்நாடுமுதல்வர் மு.க. ஸ்டாலின் மேட்டூரில் தண்ணீரை திறந்துவைத்தார். 16ஆம் தேதி கல்லணையை அமைச்சர்கள் திறந்துவைத்தனர்.

Advertisment

ஆங்காங்கே கால்வாய்க்குள் பணிகள் நடந்ததால் குறைந்த அளவே திறக்கப்படும் தண்ணீர், மிதமான வேகத்தில் கடைமடை வரை செல்ல சில நாட்கள் கூடுதலாக ஆனது. காரணம் கடந்த ஆண்டு கூடுதல் தண்ணீர் திறந்த நிலையில் பல இடங்களிலும் உடைப்பு ஏற்பட்டதுதான். 16ஆம் தேதி திறந்த கல்லணைத் தண்ணீர் கடைமடைப் பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 21ஆம் தேதி மாலை வந்து சேர்ந்தது. 22ஆம் தேதி அதிகாலை வேம்பங்குடி கிழக்கு, மேற்பனைக்காடு வந்தடைந்தது.

publive-image

Advertisment

தொடர்ந்து 312 கனஅடி தண்ணீர் நெய்வத்தளி வழியாக சென்று 22ஆம் தேதி இரவு நாகுடிக்குச் சென்றது. நாகுடியில் தண்ணீரை வரவேற்க காத்திருந்த விவசாயிகள் இரவு நேரம் என்பதால் மின் விளக்குகளை அமைத்திருந்தனர். முன்னதாக மேற்பனைக்காடு தண்ணீர் பிரியும் இடத்தில் உள்ள பாலத்தில் வாழை மர தோரணங்கள் கட்டி நெல்விதை, மலர்கள் தூவி விவசாயிகள் வரவேற்றனர். தொடர்ந்து அப்பகுதி விவசாயப் பெண்கள் கும்மியடித்து, குழவை போட்டு, இருகரம் கூப்பி காவிரித் தாயை வணங்கி மலர் தூவி வரவேற்றனர்.

மேலும் பெண்கள் பேசியதாவது, “இப்படி காலத்தோடு தண்ணீர் வந்ததைப் பார்த்து 10 வருசம் ஆச்சு. இப்ப தண்ணீரைப் பார்த்தது கடவுளைப் பார்த்தது போல இருக்கு” என்று நெகிழ்ந்து பேசி மகிழ்ந்தனர். தொடர்ந்து தண்ணீர் வந்தால் கடைமடையிலும் குறுவை, சம்பா சாகுபடி செய்ய முடியும் என்றனர்.