ADVERTISEMENT

முதல்வரின் கவனத்திற்காக காத்திருக்கும் கடைக்கோடி கிராம மக்கள்!!

11:52 AM Jun 21, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

தமிழ்நாட்டிலேயே நிர்வாக ரீதியாக அதிக நடைமுறைச் சிக்கல் உள்ளவை மாநிலத்தின், மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள கிராமங்கள்தான். இப்படியான சிக்கலில் சிக்கி சிரமப்படும் சில கிராமங்களும் அவர்களின் கோரிக்கைகளும் புதிய முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வைக்குப் போகுமா? புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் பகுதிக்குட்பட்ட ஐந்து பஞ்சாயத்துக்கள் மற்றும் அருகிலுள்ள பஞ்சாயத்துக்கள் விவசாயத்தையே பெரிதும் நம்பியிருக்கும் இந்தப் பின்தங்கிய மக்கள் அரசு நலத்திட்டங்களைப் பெற திசைக்கு ஒன்றாக இருக்கும் மாவட்ட, வட்ட, ஒன்றிய அரசு அலுவலகங்கள் தேடிச் செல்ல வேண்டியிருப்பதால் வீண் அலைச்சலும், அதனால் பண விரயமும் ஏற்படுகின்றன.

ADVERTISEMENT

மேலும், அரசு அதிகாரிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் ஏம்பல் வட்டாரம் மிகவும் பின்தங்கிய பகுதிகளாக உள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஏம்பல் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் வட்டார வளர்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளர் ப. பேரின்பநாதன், கடந்த முப்பது ஆண்டுகளாக உட்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், நீர்நிலை மேம்பாடு மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் எந்தப் பெரிய திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் எங்கள் பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருகிறது. மாவட்டத்தின் கடைக்கோடியில் ஏம்பல் வட்டாரம் இருப்பதால் பெரும்பாலான மாவட்ட உயர் அதிகாரிகள் எங்கள் வட்டாரத்திற்குவந்து பல வருடங்கள் ஆகின்றன, ஆட்சியர் உட்பட.

திசைக்கு ஒன்றாக மாவட்ட, வட்ட, ஒன்றிய அரசு அலுவலகங்கள் வெவ்வேறு நகரங்களில் அமைந்துள்ளதால், மக்கள் ஒருநாளில் முடிக்க வேண்டிய பணிக்கு பல தினங்கள் பல ஊர்களுக்குச் சென்றே பணி முடிக்கும் நிலை உள்ளது. எங்கள் பின்தங்கிய கடைகோடி மக்களின் பிரச்சனைகளைக் களையவும், வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தவும் மற்றும் நிர்வாகத்தை ஒருமைப்படுத்தவும் (Centralized administrative offices and complex) ஏம்பலை தலைமையகமாக கொண்டு புதிய வட்டம் மற்றும் ஒன்றியம் உருவாக்கப்பட வேண்டும். 10-15 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மற்ற பின்தங்கிய பஞ்சாயத்துகளை இணைத்து இப்புதிய வட்டம் ஒன்றியம் உருவாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டிலேயே நிர்வாக ரீதியாக அதிக நடைமுறை சிக்கல் உள்ளவை எங்கள் 5 பஞ்சாயத்துகள். (ஏம்பல், மதகம், குருங்களூர், இரும்பாநாடு மற்றும் திருவாக்குடி)

1. தாலுகா: ஆவுடையார் கோவில் - 16 கி.மீ

2. ஒன்றியம்: அரிமளம் - 32 கி.மீ

3. நீதிமன்றங்கள்: திருமயம், அறந்தாங்கி - 37 கி.மீ

4. பதிவு அலுவலகம் - புதுப்பட்டி 20 கி.மீ

5. மாவட்ட அலுவலகங்கள் - புதுக்கோட்டை 51 கி.மீ

6. சட்டமன்றம் அலுவலகம் - அறந்தாங்கி - 32 கி.மீ

7. நாடளுமன்ற அலுவலகம் - இராமநாதபுரம் - 90 கி.மீ

8. பொதுப்பணித்துறை அலுவலகங்கள் - திருமயம் ஆவுடையார் கோவில்

9. தேசிய வங்கி கிளை - அரிமளம்

10. மின்வாரிய அலுவலகம் - ஆவுடையார் கோவில்

இந்த ஊர்கள் அனைத்தும் ஒவ்வொரு திசையில் உள்ளது. முன்னாள் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இரத்தினசபாபதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 17 மார்ச் 2020 அன்று மிக வேகமாக வளர்ந்துவரும் நகரான ஏம்பலை மையமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து கோரிக்கை எழுப்பியுள்ளார். ஏம்பல் தலைமையகமாக கொண்டு புதிய வட்டம் மற்றும் ஒன்றியம் அமைப்பதன் மூலம் மிகச் சிறப்பாக திட்டங்களை நிறைவேற்றும். அதேவேளையில் மிகவும் பின்தங்கிய எங்கள் வட்டாரம் 5 ஆண்டுகளில் முழு தன்னிறைவு அடைவதோடு ஏம்பல் வட்டாரம் மற்றும் 15 பஞ்சாயத்துகள் பெருவளர்ச்சி பெறும் என கருத்து தெரிவித்தார்.

சிவகங்கை நாடளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஏம்பல் வட்டார மக்களின் வட்டம், ஒன்றிய கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சருக்கு கடிதம் அளித்துள்ளார். ஏம்பல் வட்டார சட்டமன்ற, நாடளுமன்ற உறுப்பினர்கள், புதுக்கோட்டை மாவட்ட அமைச்சர்கள் ஆகியோர் இணைந்து முதல்வர், வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆகியோரின் துணையோடு ஏம்பல் புதிய வட்டம் மற்றும் ஒன்றிய கோரிக்கையை நிறைவேற்றிவரும் பட்ஜெட் கூட்டதொடரில் முதல்வர் ஏம்பல் புதிய வட்டம் ஒன்றியம் உருவாக்கத்தை அறிவிக்க வேண்டும் என்பதே ஏம்பல் வட்டார பொதுமக்களின் எதிர்பார்ப்பார்பாக உள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT