புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தி.ரா.பெரியசாமி தோழர் - விசாலாட்சி தம்பதிகளின் மகன் சீனிவாசன். 8.8.1974 ல் பிறந்தார். விவசாய குடும்பம். பள்ளி படிப்பை முடித்தவர் பிழைப்பிற்காக அறந்தாங்கியில் ஒரு மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கிடம் வேலைக்கு சென்றார். தொழில் கற்றுக் கொண்ட நிலையில் தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் தனியாக கடை திறந்தார். மோட்டார் சைக்கிள் பழுது நீக்குவதில் வல்லவராக இருந்தார்.

pudukottai

Advertisment

2003 ல் தான் பழுது நீக்கிய மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பார்க்கச் சென்றார். மோட்டார் சைக்கிள் டயர் வெடித்து விபத்தில் சிக்கினார். தலையில் பலத்த காயம்ஏற்பட்டுமூக்கு, வாய், காதில் ரத்தம் கொட்டியது. பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் என்று நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். சீனிவாசனின் நிலையை பார்த்த மருத்துவர்கள் பிழைக்க வழியில்லை. சொந்தங்களுக்கு சொல்லிவிட்டு தூக்கிச் செல்லுங்கள் என்று சொல்லிவிட்டதால் நண்பர்கள் கதறி அழுதனர். அதே நேரத்தில் அவரது நண்பனின் அண்ணன் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் பணி செய்பவர் வந்து பார்த்துவிட்டு சிகிச்சைகள் செய்வோம் என்று நம்பிக்கை கொடுத்துவிட்டு சிகிச்சையை தொடங்கினார்.

Advertisment

 confident motorcycle mechanic Srinivasan ... !!

சக மருத்துவர்களும் துணையாக சிகிச்சை செய்த 13 நாட்களுக்கு பிறகு தஞ்சை ராஜாமிராசுதார் மருத்துவமனையில் சோதனைகளுக்காக கொண்டு சென்ற போதுதான் தான் நினைவு திரும்பியது. தான் மருத்துவமனைக்கு எதற்கு வந்தோம் என்பது கூட தெரியவில்லை. அருகில் இருந்த அக்கா ஜீவரத்தினம் ஆனந்த கண்ணீர் வடித்தார். தன் தம்பிக்கு நினைவு திரும்பியது என்பதால்.

ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. பலகட்ட சோதனைகளுக்கு பிறகு மருத்துவர்கள் சொன்னது.. தலையில் பலமாக அடிபட்டிருப்பதால் கண்ணுக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டுவிட்டது. படிப்படியாக பார்வை இழப்பு ஏற்படும் என்று சொல்லிவிட்டார்கள். அதே போல பார்வை குறையத் தொடங்கியது. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, பெங்களூர் என்று 3 வருடங்கள் தொடர்ந்து சிகிச்சைக்காக சென்றும் பலனில்லை முற்றிலும் பார்வை குறைந்துவிட்டது.

இந்த நிலையில் அடுத்த இடியாக அப்பாவும் இறந்துவிட்டார். அடுத்த சில ஆண்டுகளில் அம்மாவுக்கும் புற்றுநோய் பாதிப்பு எற்படஅக்கா அவரை சென்னை அடையாறில் வைத்துக் கொண்டு கவனிக்க தன்னை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை. ஆனாலும் துவண்டுவிடவில்லை சீனிவாசன்.

 confident motorcycle mechanic Srinivasan ... !!

பார்வை இழப்பு தானே.. தன்னால் முடியும் என்ற நம்பிக்கையை வரவழைத்துக் கொண்டு நண்பர்களை அழைத்து மோட்டார் சைக்கிள் பாகங்களை காட்டச் சென்னார். அதற்கானடூல்ஸ்களையும் எடுத்துத் தரச் சொல்லி கழட்டி மாட்டினார். இது கொஞ்ச காலம், அடுத்து தானே எல்லாவற்றையும் செய்யத் தொடங்கிவிட்டார். அதில் கிடைத்த வருமானத்தை தன் அம்மாவின் புற்றுநோய் சிகிச்சைக்காக பணம் அனுப்பி வைத்தார். 5 வருடங்கள் போராட்டம்.. புற்றுநோயின் வீரியம் அதிகமாகி அம்மாவும் இறந்துவிட்டார்.

அதன் பிறகு தாயும், தந்தையுமாக இருந்து சகோதரி ஜீவரத்தினமே தன்னை கவணித்துக் கொள்கிறார். இந்த நிலையில் அவருக்கும் ஒரு திருமணம் செய்ய வேண்டும் என்று உறவினர்கள் சொல்ல.. தனக்கு உள்ள குறைபாடுகளை சொல்ல பெண் கேளுங்கள். அவர்கள் சம்மதித்தால் பிறகு திருமணம் என்று சொல்லிவிட்டார். அதேபோல சொன்ன பிறகு எல்லாவற்றையும் அறிந்த கலா திருமணத்திற்கு சம்மதித்து கடந்த ஆவணியில் திருமணமும் முடிந்தது.

இது குறித்து சீனிவாசன் கூறும் போது.. விபத்தில் பார்வை இழப்பு ஏற்பட்டதும் துவண்டுதான் போனேன். வாழ்க்கையே இருண்டு போனதேனு பகல் இரவு பாராமல் கலங்கி அழுதேன். ஆனால் இயற்கை நமக்கு கொடுத்தது இவ்வளவு தான் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன். நம்மாலும் வாழ முடியும், பழையபடி மோட்டார் சைக்கிள் பழுது நீக்க முடியும் என்ற நம்பிக்கையோடு நண்பர்களை துணைக்கு வைத்துக் கொண்டு கொஞ்ச நாள் பழகினேன். அதன் பிறகு எல்லாம் பழகிவிட்டது. இப்ப எந்த மோட்டார் சைக்கிள் எஞ்சினாக இருந்தாலும் தனி ஆளாக பிரிச்சு மாட்டுவேன். துணை தேவை இல்லை. என் வேலையை பார்த்துவிட்டு எனக்கென்று வாடிக்கையாளர்கள் வருவார்கள். பழைய வண்டி முதல் இப்ப வரும் லேட்டஸ்ட் வண்டி வரை எல்லாம் பழுது நீக்க முடியும்.

எஞ்சின் கழட்டி மாட்ட சில உபகரணங்கள் இல்லாமல் வேற மெக்கானிக்களிடம் ஓசி வாங்கி வந்து கழட்டி மாட்டுவேன். ஒரு நாள் அதைப் பார்த்த குளமங்கலம் பாரதப் பறவைகள் சமூக நல அறக்கட்டளை நிர்வாகிகள் வந்து பார்த்திருக்காங்க. நான் வேலை செயவதைப் பார்த்துவிட்டு எஞ்சின் கழட்டி மாட்டும் அனைத்து உபகரணங்களையும் வாங்கி கொடுத்து உதவி உள்ளனர்.

எனக்கு அரசாங்கம் மாதாந்திர உதவித் தொகை கிடைக்கிறது. ஆனால் ஸ்பேர்ஸ் வாங்கி வைக்க வங்கி கடன் உதவிகள் கிடைத்தால் அதை வைத்து என்னால் இன்னும் வளர முடியும். அந்த உதவி கிடைத்தால் நல்லது. இப்ப வரை எனக்கு தாய் தந்தையாக என் சகோதரி ஜீவரத்தினம் தான் இருக்காங்க. மனைவி கலாவும் என்னை நல்லா கவனிச்சிகிறாங்க. நண்பர் உதவியும், துணையும் நல்லா கிடைக்கிறது. எனக்க பார்வை இல்லை என்ற நினைவுகளே இல்லை. யாராவது அதைப் பற்றி பேசினால் தான் தெரியும்.நமக்குள் உள்ள எந்த குறையும் குறையில்லை. தன்னம்பிக்கை இருந்தால் குறைகளையும் நிறைகளாக மாற்ற முடியும் என்றார் நம்பிக்கையோடு..

அவரது வாழ்க்கைக்கு உதவி நினைத்தால் உதவிகள் செய்யலாம்.