ADVERTISEMENT

என்.எல்.சியை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

11:03 AM Dec 08, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

என்.எல்.சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தராததைக் கண்டித்து பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல்.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டத்திற்குட்பட்ட தெற்கிருப்பு, மேற்கிருப்பு, நண்டுக்குழி, நாச்சிவெள்ளையன்குப்பம், கோவிலான்குப்பம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தால் நிலம் எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட கிராமங்களாக உள்ளன.

ஆனால், இக்கிராமங்களுக்குத் தேவையான சாலை வசதி, வடிகால் வசதி, சுடுகாட்டுப் பாதை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்யாமல் என்.எல்.சி. நிர்வாகம் புறக்கணித்து வருவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு உள்ளது.

ஆனால், இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடமும், என்.எல்.சி நிர்வாகத்திடமும் பலமுறை கோரிக்கை மனு அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளாததால் ஆத்திரமடைந்த 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து விருத்தாச்சலம் - கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசக்குழி பகுதியில் நேற்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரமாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த ஊமங்கலம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும் என்று கூறியதின் பேரில் மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.

மேலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் என்.எல்.சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்யாவிட்டால் அடுத்த கட்டமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இடுவோம் எனக் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT