Anbumani condemned transfer panchayat secretaries passed resolution against NLC

Advertisment

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிகளுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் என்.எல்.சி நிறுவனம் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் என்.எல்.சி நிறுவனம் மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன் நிலங்களை கையகப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே மே தினத்தை முன்னிட்டு கடந்த 1 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் மேல்புவனகிரி ஒன்றியத்தை சேர்ந்த கத்தாழை, சின்னநற்குணம்,மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, நெல்லிக்கொல்லை, எறும்பூர் ஆகிய 6 ஊராட்சிகளிலும் என்.எல்.சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது பற்றி மாவட்ட ஆட்சியர், மாவட்ட திட்ட இயக்குநர் ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் என்.எல்.சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய 6 ஊராட்சிகளில் பணியாற்றி வந்த ஊராட்சி செயலர்களை நிர்வாக காரணங்கள் எனக் கூறி மேல்புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் கத்தாழை, ஊராட்சி செயலாளர் சிற்றரசு துறிஞ்சிகொல்லை ஊராட்சிக்கும், சின்னநெற்குணம் ஊராட்சி செயலர் சசிகுமார் மேல்வளையமாதேவி ஊராட்சிக்கும், மேல்வளைமாதேவி ஊராட்சி செயலாளர் லீமா சின்னநெற்குணம் ஊராட்சிக்கும், கீழ்வளையமாதேவி ஊராட்சி செயலாளர் லூர்துமேரி நெல்லிக்கொல்லை ஊராட்சிக்கும், நெல்லிகொல்லை ஊராட்சி செயலாளர் பாலமுருகன் கத்தாழைக்கும், எறும்பூர் ஊராட்சி செயலாளர்பாலகணபதி காத்திருப்போர் பட்டியலுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

இதனிடையே என்.எல்.சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்காக ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்தது கண்டிக்கத்தக்கது என்றும்,என்.எல்.சிக்கு ஆதரவாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் செயல்பட்டு மக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்துகிறது என்றும் கூறியுள்ள பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இவர்களின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து என்.எல்.சிக்காக கட்டாயப்படுத்தி நிலங்களை கையகப்படுத்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளார்.