ADVERTISEMENT

சுபஶ்ரீ மறைவு: விளம்பரத் தட்டிகள் தொடர்பாக அரசு சட்டம் இயற்ற வேண்டும்- விடுதலைச்சிறுத்தைகள் கோரிக்கை!

11:47 PM Sep 13, 2019 | santhoshb@nakk…

சென்னை, பல்லாவரம் பகுதியைச் சார்ந்த இளம்பெண் சுபஶ்ரீ அவர்கள் விபத்தில் சிக்கி பலியானது மிகவும் வேதனையளிக்கிறது. சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சியொன்றின் விளம்பரத் தட்டி, இருசக்கர வண்டியில் பயணித்த சுபஶ்ரீயின் மீது சரிந்து விழுந்ததால், அவர் தடுமாறி தரையில் வீழ்ந்துள்ளார். அப்போது அவர்மீது லாரி மோதியதில் பலியாகியுள்ளார். இது சகித்துக்கொள்ள இயலாத மிகவும் கொடிய துயரமாகும். அவரை இழந்து வாடுகிற அவரது கும்பத்தினருக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ADVERTISEMENT

விபத்து நேர்வதற்குக் காரணமானவர்கள்மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் சுபஶ்ரீயின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டுமெனவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

ADVERTISEMENT


விளம்பரத் தட்டிகள், சுவர் விளம்பரங்கள், கொடி தோரணங்கள் ஆகியவை தொடர்பாக காவல்துறை ஓரவஞ்சனையான அணுகுமுறைகளைப் பின்பற்றுகிறது. குறிப்பாக, ஆளுங்கட்சியினருக்குத் தாராளமான சுதந்தரத்தை அளிக்கிறது. எந்தக் கட்டுப்பாடுகளும் விதிப்பதில்லை. உயர்நீதிமன்ற ஆணைகளையும் பொருட்படுத்துவதில்லை. சாலைகளை மறித்து குறுக்கும் நெடுக்குமாக விளம்பரப் பாதாகைகளை வைக்க அனுமதிக்கிறது. போக்குவரத்து இடையூறுகளைப் பற்றியும் கிஞ்சித்தும் கருத்தில் கொள்வதில்லை. அனைத்து அத்துமீறல்களையும் அனுமதிப்பது எழுதப்படாத விதியாக உள்ளது.

பல்லாவரத்திலும் இதே அணுகுமுறையைத்தான் காவல்துறை கையாண்டுள்ளது. அதன் விளைவாகவே சுபஶ்ரீயின் சாவு என்பதை அறிய முடிகிறது. எனவே இந்தப் பலிக்கு அரசும் காவல்துறையுமே பொறுப்பு ஏற்க வேண்டும். அத்துடன், விபத்துக்குக் காரணமாகும் வகையில் அலட்சியமாக செயல்பட்டுள்ள அரசியல் கட்சியினர் மற்றும் காவல்துறையினர் மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதேவேளையில், விளம்பரத்தட்டிகள் தொடர்பாக பொதுவான வழிகாட்டுதல்கள் அல்லது வரையறைகள் ஏதுமில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே, தமிழக அரசு இது தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டுமென தமிழக அரசை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

இந்நிலையில், விடுதலைச்சிறுத்தைகளின் நிகழ்ச்சிகளில் விளம்பரத்தட்டிகள் அமைக்கும் போக்குகளை முற்றாக கைவிட வேண்டுமென இதன்மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT