ADVERTISEMENT

குப்பையை பிரித்து தந்ததால் தங்கம்... அசத்தும் வேலூர் இளைஞர்!

02:52 PM Feb 07, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேலூர் மாநகராட்சி 24 வது வார்டில் வசிக்கும் பொதுமக்களிடம் கடந்த டிசம்பர் மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுயிருந்தார் வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்த மென்பொருள் வல்லுநரான தினேஷ் சரவணன். அந்த அறிவிப்பில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரண்டாக பிரித்து நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் பொதுமக்கள் வழங்கவேண்டும். ஒரு நாள் விடாமல் தொடர்ந்து 30 நாட்களும் குப்பையை பிரித்து போடுபவர்கள் தூய்மை பணியாளர்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள். முப்பதாவது நாளில், ஒரு நாள் விடாமல் குப்பையை பிரித்து கொடுத்த அனைவரது பெயரையும் ஒரு துண்டு சீட்டில் எழுதி ஒரு குடுவையில் போடப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதலாவதாக தேர்ந்தெடுக்கப்படும் 2 நபர்களுக்கு தங்கமும், 4 நபர்களுக்கு வெள்ளியும் பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி கடந்த 45 நாட்களாக 24வது வார்டு மக்களை தொடர்ந்து கண்காணித்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 நபர்களில், இரண்டு பேருக்கு தங்கமும், 4 பேருக்கு வெள்ளி வழங்கும் நிகழ்வு மாநகராட்சி ஆணையர் சங்கரன், மாநகர நல அலுவலர் மருத்துவர் சித்ரசேனா, மண்டலம் 2 சுகாதார அலுவலர் சிவக்குமார் போன்றோர் வெற்றி பெற்ற பெண்களுக்கு பிப்ரவரி 6 ஆம் தேதி வழங்கினார்கள்.

இதேபோல் வேலூர் தோட்டப்பாளையம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் +2 மாணவிகள் 250 பேருக்கு தேர்வு எழுத எழுது பொருட்கள் இலவசமாக ஆசிரியர்கள் மூலமாக வழங்கியுள்ளார். வயதான, ஏழ்மையான தனிமையில் வாழும் முதியோர்களுக்கு மளிகை பொருட்கள் உட்பட உதவிகள் வழங்குவது, வீடு கட்ட பொருள் உதவி, கிராமப்புற பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை அமைத்து தருவது, தன்னம்பிக்கை வகுப்புகள் எடுப்பது என செயல்படுகிறார்.


இதுக்குறித்து 31 வயதான தினேஷ் சரவணனிடம் நாம் பேசியபோது, ''எனது அப்பா செல்வராஜ், பால் வியாபாரி. அம்மா தயிர் வியாபாரம் செய்து வந்தார். என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரி. அதில் பெரிய அண்ணன் சரவணன், 8வது வரை மட்டும்மே படித்திருந்தார். குடும்ப தேவைக்காக அவரும் அப்பாவுடன் இணைந்து பால் வியாபாரம் செய்து மற்ற மூன்று பேரை படிக்க வைத்தார். அவர் பால் வியாபாரம் செய்ததோடு, எங்களை விட ஏழ்மையில் இருப்பவர்களுக்கும், பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள், படிக்கவைக்க முடியாத ஏழை குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார்.

2014ல் அவரது 35வது வயதில் திடீரென சாலை விபத்தில் இறந்துவிட்டார். அப்போது அவரால் உதவி பெற்றவர்கள் பலர் வந்து அழுதபடி அவர் செய்த உதவிகளை நினைவு கூர்ந்தபோது கலங்கிவிட்டோம். அவர் இறப்புக்கு பின்பு அவரின் சமூக தொண்டு பாதியில் நின்றுவிட்டது. அவர் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு தான் பி.இ முடித்துவிட்டு சென்னையில் வேலைக்கு சேர்ந்தியிருந்தேன். அண்ணன் செய்து வந்த உதவிகள் திடீரென்று நிற்பதை மனம் ஏற்கவில்லை. அதை ஏன் நாம் செய்யக்கூடாது என நினைத்து நான் இந்த சேவையில் இறங்கினேன். என்னுடைய சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை எடுத்து அதிலிருந்து தான் இந்த உதவிகளை செய்கிறேன். இதற்காக வாரத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாள் வேலூர் வந்துவிடுவேன். என்னால் முடிந்தளவு தேவை இருப்பவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறேன். இதையெல்லாம் நான் முகநூல், ட்விட்டர் போன்றவற்றில் பதிவிட்டு வந்தேன். அதனைப்பார்த்து தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி ட்விட்டரில் என்னை பாராட்டினார்.

சமூக வளைத்தளம் வழியாக நான் செய்யும் உதவிகளை பார்த்தவர்கள் சிலர், எங்களால் களத்தில் இறங்கி உதவ முடியாது, நீங்கள் எங்கள் சார்பாக உதவ முடியுமா எனக்கேட்டு தொடர்பு கொண்டார்கள். நான் உதவி செய்ய எந்த அமைப்பையும் வைத்திருக்கவில்லை, தனிப்பட்ட முறையில், சொந்தப்பணத்தில் இருந்துதான் உதவி செய்கிறேன். மற்றவர்களிடம் பணம் வாங்கி உதவினால் சரியாக இருக்குமா என யோசித்தேன். சிலரின் அன்பால் அவர்கள் தந்த நிதியை வாங்கி அவர்கள் சொல்வது போல் உதவுகிறேன். அதுக்குறித்த கணக்கை பிளாக் வழியாக வெளிப்படையாக தெரிவித்துவிடுகிறேன்'' என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT