ADVERTISEMENT

கர்நாடக முதல்வரிடம் திருமாவளவன் வேண்டுகோள்...

08:17 PM Jul 02, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை வரவேற்கிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கை:

ADVERTISEMENT

’’இன்று முதன் முதலாக கூடிய காவிரி மேலாண்மை வாரியம் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிடும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். கர்நாடக அரசு எவ்வித தாமதமும் செய்யாமல் ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

காவிரி மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டம் இன்று நான்கு மணி நேரம் நடைபெற்றுள்ளது. அதில் பல்வேறு பிரச்சனைகளும் விவாதிக்கப்பட்டுள்ளன. அதன் முடிவில் தமிழகத்துக்கான தண்ணீரைத் திறந்து விடுமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அரசு ஒவ்வொரு மாதமும் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரின் அளவை காவிரி நடுவர் மன்றம் வரையறை செய்திருந்தது. ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி., ஜூலையில் 34, ஆகஸ்டு மாதத்தில் 50 டி.எம்.சி., செப்டம்பரில் 40 டி.எம்.சி., அக்டோபரில் 22 டி.எம்.சி., நவம்பரில் 15 டி.எம்.சி., டிசம்பரில் 8 டி.எம்.சி., ஜனவரியில் 3 டி.எம்.சி., பிப்ரவரி மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தலா 2.5 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு அளிக்கப்பட வேண்டும் என நடுவர் மன்றம் கூறியிருந்தது.

தமிழகத்துக்கான ஒதுக்கீட்டில் 14.75 டிஎம்சியை உச்சநீதிமன்றம் குறைத்துவிட்டதால் அதற்கேற்ற விகிதத்தில் மாதாந்திர தண்ணீரின் அளவு குறைக்கப்பட வேண்டும். அப்படி மாற்றி அமைக்கப்பட்ட மாதாந்திர அளவு எவ்வளவு என்பதை இன்னும் காவிரி மேலாண்மை ஆணையம் இறுதி செய்யவில்லை. இந்நிலையில் ஜூன் மாதத்தில் வழங்கப்பட்ட தண்ணீரில் மேலதிகமாக கொடுக்கப்பட்டது போக ஜூலை மாதத்துக்கான தண்ணீராக 31.24 டிஎம்சி தண்ணீரைக் கொடுக்கும்படி தற்போது ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகத்தில் நீர்பிடிப் பகுதிகளில் வழக்கத்துக்கு அதிகமாக மழைபெய்து வரும் நிலையில் தமிழகத்துக்கான தண்ணீரைத் தயக்கமின்றி அளித்து கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் சுமூகமான சூழலை உருவாக்கித் தர கர்நாடக முதல்வர் முன்வர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT