ADVERTISEMENT

வேங்கை வயல் விவகாரம்; 11 பேருக்கு டி.என்.ஏ சோதனை

08:20 AM Apr 25, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

முதலில் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் குறிப்பிட்ட சிலரிடம் விசாரணை நெருங்கிய நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பையே குற்றவாளிகளாக்க நினைக்கிறது போலீஸ், அதனால் விசாரணையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இறுதிக் கட்டத்தை எட்டியதாக விசாரணைக் குழு சொன்னபோது, இந்த விசாரணைக் குழுவையும் மாற்ற வேண்டும் இந்தக் குழுவும் எங்களையே குற்றவாளிகளாக மாற்றப் பார்க்கிறது என்று வேங்கை வயல் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

இந்த சம்பவம் நடந்து 120 நாட்களுக்கும் மேல் ஆகும் நிலையில் சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கை தொடர்ச்சியாக விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை 144 பேரிடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்ட நிலையில் தமிழக அரசு தனி நீதிபதி சத்தியமூர்த்தி தலைமையில் ஆணையம் ஒன்றையும் அமைத்தது. தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறையினர், விசாரித்ததில் 11 பேரிடம் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ள வேண்டும் என புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தை நாடினர். குடிநீர் தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவில் எடுத்த மாதிரியைக் கொண்டு தேர்வு செய்யப்பட்டவர்களிடம் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளும் போது குற்றவாளிகளை நெருங்க முடியும் என நீதிமன்றத்தில் கூறினர்.

தொடர்ந்து மகிளா நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவில், வேங்கைவயலைச் சேர்ந்த 9 நபர்கள், கீழமுத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அதேபோல் காவிரி நகரைச் சேர்ந்த ஒருவர் என 11 பேரிடம் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ள உதவுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த உத்தரவானது புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் உதவிப் பேராசிரியருக்கு கடந்த 18 ஆம் தேதி அனுப்பப்பட்டிருந்தது. இந்த சோதனைக்கென பார்த்திபன் என்ற அதிகாரியையும் நீதிபதி நியமித்திருந்தார். மேலும் புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை பயிற்சி காவலர் ஒருவர் உட்பட இருவர் இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளம் மூலம் குரல் பதிவாக தகவல் பரிமாறி உள்ளனர். இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய குரல் மாதிரி பரிசோதனை செய்யவும் உத்தரவிட்டிருந்தார்.

கடந்த 21.04.2023 சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வு மையத்தில் ஆயுதப்படை பயிற்சி காவலர் ஒருவர் உட்பட இருவருக்கும் குரல் மாதிரி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குடிநீரில் ஒரு பெண் மற்றும் இரு ஆண்களின் மனித கழிவு கலந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக 11 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ சோதனையின் முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் யாருடைய மனிதக் கழிவு குடிநீரில் கலக்கப்பட்டது என்ற விவரம் தெரியவரும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சேகரிக்கப்பட்ட 11 பேரின் மாதிரிகளுக்கு இன்று டிஎன்ஏ பரிசோதனை தொடங்குகிறது. இந்த 11 மாதிரிகள் அந்த மூன்று மாதிரிகளுடன் ஒத்துப்போனால் இந்த வழக்கு முடிவுக்கு வரும். அப்படி இல்லையெனில் கூடுதலாக 147 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்களுக்கும் மேலும் கூடுதலாக டிஎன்ஏ பரிசோதனைகள் மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் டிஎன்ஏ சோதனையின் முடிவுகள் வர மூன்று மாத காலங்கள் ஆகும் எனவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT