Skip to main content

ஓராண்டை விழுங்கிய 'வேங்கைவயல்' - ஒருவரும் பிடிபடாத மாயம்

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
One year of vangaivyal is over! No one got caught!

கடந்த ஆண்டு டிசம்பர் 26 ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வந்த தண்ணீரை குழாய்களில் பிடித்த மக்களுக்கு அதிர்ச்சி. அந்த தண்ணீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்டிருந்ததை சில இளைஞர்கள் தொட்டியில் ஏறிப் பார்த்து சொன்னார்கள்.

இந்த தகவல் அறிந்து ஒரு மணி நேரத்தில் அங்கு வந்த கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர் எம்.சின்னத்துரை தண்ணீரை பார்த்தவுடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரவைத்தார். 

அப்போது நம்மிடம் பேசிய தோழர் எம்.சின்னத்துரை, 'இந்த ஊரில் வாழும் மக்கள் எந்த பாகுபாடும் இல்லாமல் ஒற்றுமையாகவே வாழ்கிறார்கள். யாரோ இந்த இழி செயலை செய்திருக்கிறார்கள். அந்த இழி செயலை செய்த சமூகவிரோதிகளை உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறோம். போலீசார் விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள். குடி தண்ணீருக்கு மாற்று ஏற்பாடு செய்ய சொல்லி இருக்கிறோம். இந்த வேங்கைவயல் கிராமத்தில் சில குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குடிநீரால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்றும் ஆய்வு செய்ய வேண்டும்' என்றார்.

இந்த விவகாரம் இந்திய அளவில் எதிரொலிக்கத் தொடங்கியது. பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை முன்னெடுத்தனர். வேங்கைவயல், இறையூர் ஆகிய கிராம மக்களும் இந்தப் பிரச்சனையால் எங்களுக்குள் வேற்றுமையை உருவாக்க நினைத்துள்ளனர். அதனால் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்றனர். தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கி விசாரணை சென்று கொண்டிருந்த போது சிலர் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்ததாக தனிப்படை போலீசார் போலிசார் கூறிவந்தனர். பாதிக்கப்பட்ட எங்கள் தரப்பையே விசாரணைக்கு அழைக்கிறார்கள் என்று வேங்கைவயல் மக்கள் குற்றம்சாட்டினர். இதற்கிடையில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கயல்விழி ஆகியோர் வந்து சமத்துவப் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

ஜனவரி 25 ந் தேதி இந்த வழக்கை சிபிசிஐடி க்கு மாற்றியது தமிழ்நாடு அரசு. அடுத்த நாளே  விசாரணை தொடங்கி சுமார் 220 பேருக்கு மேல் விசாரணை சென்ற நிலையில் சாட்சிகள் இல்லாததால் அறிவியல்பூர்வமாகவே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனித கழிவு கலக்கப்பட்ட தண்ணீரை சோதனைக்கு அனுப்பினர். அதில் பெண் உட்பட சிலரது கழிவுகள் கலக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் வந்தது. அதன் பிறகு சம்பவம் நடந்த அன்று வேங்கைவயல் இளைஞர்கள் உட்பட பலர் உறுப்பினர்களாக உள்ள வாட்ஸ் அப் தளத்தில் நடந்த உரையாடலை வைத்து அதில் ஒரு போலீஸ்காரர் உட்பட 2 பேரிடம் குரல் பரிசோதனை செய்யப்பட்டது.

இதனையடுத்து வழக்கை சிபிஐ க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணாவை தனிநபர் கமிசனாக அமைத்தது தமிழ்நாடு அரசு. தொடர்ந்து டிஎன்ஏ பரிசோதனைக்கு பலரது பட்டியலை நீதிமன்றத்தில் கொடுத்தனர். முதல்கட்டமாக பலர் இந்த பரிசோதனைக்கு உட்பட மறுத்தனர். அதன் பிறகு பரிசோதனைக்கு வந்தனர். 

இதுவரை 31 பேருக்கு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. வேங்கைவயல் குற்றவாளிகளை வெளி உலகுக்கு காட்டுங்கள் என்று தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றனர்.

டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகு உண்மையான குற்றவாளியை கண்டறிய முடியாமல் திணறும் விசாரணைக்குழுவினர் அடுத்தகட்டமாக உண்மை கண்டறியும் சோதனைக்கு பலரை உட்படுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நடந்து ஒரு வருடம் முடிந்து விட்ட நிலையிலும், இதுவரை ஒருவரைக் கூட பிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர் சிபிசிஐடி போலீசார். எத்தனையோ வழக்குகளில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்யும் போலீசார் வேங்கைவயல் சம்பவத்தில் அரசியலுக்காக மெத்தனமாக செயல்படுகிறார்களா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் பொதுமக்கள்..

இது மற்ற வழக்குகள் போல சாதாரனமாக முடித்துவிட முடியாது. அறிவியல்பூர்வமாகவே நிரூபிக்க வேண்டியுள்ளதால் தான் இத்தனை சோதனைகளும் நடத்தி வருகிறோம் என்கின்றனர் போலீசார். ஒரு வருடம் ஓடிவிட்டாலும் யார் குற்றவாளி என்பதை இன்னும் அறிய முடியாமல் உள்ள நிலையில் சாட்சியாக மட்டும் உயர்ந்து நிற்கிறது அந்த தண்ணீர் தொட்டி.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி- சட்டக்கல்லூரி மாணவர் கைது

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Law college student arrested for fraud of getting a job in the Secretariat

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 25 அம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் 'நான் அரிமளம் பகுதிக்கு சென்றிருந்த போது மீனாட்சிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக் அறிமுகமானார். தான் சென்னை செட்டியார் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் சோசியல் மீடியாவில் நிறைய பதிவுகள் போடுவேன். எனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும் சொன்னார்.

அதன் பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் யாருக்காவது வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் வாங்கித் தருகிறேன் என்றார். அப்போது எனக்கே வேலை வேண்டும் என்றேன். அதற்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார். நானும் அவர் சொன்னதை நம்பி நான் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்துவதாக சொன்ன போது வேண்டாம் நேரில் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னவர் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கார்த்திக் புதுக்கோட்டை வந்திருப்பதாக தெரிந்தது. நானும் என் நண்பன் பாலகிருஷ்ணனும் அன்று மாலை புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சந்தித்து முதல் தவணையாக ரூ.1 லட்சம் பணமாக கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டவர் மீதி ரூ.2 லட்சத்தை ரெடி பண்ணுங்க என்று சொல்லிவிட்டு போனார்.

அதன் பிறகு வேலை என்னாச்சு என்று கேட்க பலமுறை அவரை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று (ஏப்ரல் 25 ஆம் தேதி) அறந்தாங்கி எம்ஜிஆர் சிலை அருகே நான் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு நபர் என்னிடம் நங்கள் தான் சத்திரயாரஜா என்று கேட்டவர் கார்த்திக் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார் என்று சொல்லிவிட்டு அவரது செல்போனில் வாட்ஸ் அப் காலில் கார்த்திக்கிடம் பேசச் சொன்னார். அப்போது ஏன் என் போனை எடுக்கவில்லை. என் வேலை, பணம் என்னாச்சு என்று கேட்ட போது, உன் பணம் வெளியில் கொடுத்துவிட்டேன். இனிமேல் பணமும் இல்லை, வேலையும் இல்லை என்று சொன்னதோடு இனிமேல் பணம் கேட்டால் எனக்குத் தெரிந்த காரைக்குடி ரவுடிகளை வைத்து உன்னை தீர்த்துக்கட்டிவிடுனே் என்று கொலை மிரட்டல் செய்ததோடு தகாத வார்த்தைகளிலும் பேசிவிட்டு போனை நிறுத்திவிட்டார். என்னிடம் போனைக் கொடுத்த நபரும் என்னை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

எனக்கு தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் பணமும் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டு என்னையும் என் குடும்பத்தையும் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

புகார் குறித்து வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன் தனிப்படை அமைத்து வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திக்கை சென்னையில் கைது செய்து அறந்தாங்கி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். மேலும் விசாரனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சென்னை முதல் அறந்தாங்கி வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.