ADVERTISEMENT

“சீமான் கருதுவதில் எந்த தவறுமில்லை” - விஜய்யின் அரசியல் குறித்து வைரமுத்து

12:21 PM Jun 20, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். அவ்வப்போது அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளைக் கௌரவிக்கும் வகையில் அவர்களை நேரில் சந்தித்து ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

கல்வி விருது விழா என்ற பெயரில் நடைபெற்ற இவ்விழாவில் பேசிய நடிகர் விஜய், மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளைக் கூறினார். அப்போது, மாணவர்கள் பாடப்புத்தகங்களைத் தாண்டி நிறையப் படிக்க வேண்டும். முடிந்த வரைக்கும் எல்லா தலைவர்களையும் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். குறிப்பாக அம்பேத்கர், பெரியார், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களைப் பற்றிப் படியுங்கள் என்று கூறியிருந்தார்.

இது அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் விழாவில் இன்றைய மாணவர்கள்தான் நாளைய வாக்காளர்கள் என்று விஜய் பேசியிருந்ததால் அரசியல் காரணத்திற்காகத்தான் இந்த விழா நடத்தப்பட்டது என்று பலரும் கூறி வருகின்றனர். இது தொடர்பாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “திரைப்படத்தில் நடிப்பதால் மட்டுமே நாட்டை ஆள்வதற்கு, ஒரு இனத்தை வழிநடத்துவதற்கு, தலைவனாக இருக்கக் கூடியதற்கு தகுதி வந்துவிட்டது என்று நினைப்பது அவமானம்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த கவிஞர் வைரமுத்து, “சீமான் சொல்வது போல் நடிகனாக இருப்பது மட்டுமே அரசியலுக்குத் தகுதியானவர் என்று அர்த்தம் கிடையாது. நடிகர் என்ற அறிமுகத்தோடு, சமூக அக்கறையும், ஆற்றலும், லட்சியமும் வேண்டும் என்று சீமான் கருதுவது தவறு இல்லையே. அது ஒவ்வொரு தமிழனும் கூறக்கூடிய கருத்துதானே. சினிமா நடிகனும் ஒரு மனிதன் தானே, சினிமா நடிகனும் ஒரு வாக்காளன் தானே, சினிமா நடிகனும் இந்தியக் குடிமகன் தானே, அவனுக்கு உரிமை உண்டுதானே. ஒருவனுக்கு சினிமா நடிகன் என்றோ, கல்வியாளன் என்றோ எந்த வேறுபாடும் கிடையாது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால் அரசியல் அவர்களைத் தேர்ந்தெடுக்கிறதா என்பதுதான் முக்கியம்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT