Skip to main content

புதிய கட்சி, விஜய்க்கு சீமான் கொடுத்த அட்வைஸ்

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
seeman about vijay political party name

சமீப காலமாகத் தனது மக்கள் இயக்கத்தை தீவிரமாக செயல்பட வைத்த விஜய், அதை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை தனது அரசியல் கட்சிக்கு வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதனை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட விஜய், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்துவிட்டு முழுமையாக கட்சி பணிகளை கவனிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. 

இந்த நிலையில் புதிதாக அரசியல் கட்சி பெயரை அறிவித்துள்ள விஜய்க்கு, அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடம் பேசுகையில், “விஜய் என்ன தத்துவத்தை முன்வைக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். விஜய்க்கு மட்டுமல்ல எல்லாத்துக்கும் சேர்த்து சொல்றேன். தொடங்குவது எளிது. தொடர்வது ரொம்ப கடினம். தொடங்கும் போது இருக்கும் ஆர்வமும் ஈடுபாடும் கடைசி வரை தொடர வேண்டும். அப்படி தொடர்ந்தால் யாரும் வெல்லலாம். அதில் விஜய் மட்டும் விதிவிலக்கல்ல. 

இன்றைய அரசியலில் சூழலில், ஒரு நடிகரின் கட்சிக்கு, அவரின் ரசிகர் மட்டும் வாக்களித்து வென்று நாட்டை ஆளுவது என்பது சரித்திர புரட்சியாகும். ஆனால் வெகுவான மக்களை இழுக்கனும். எம்.ஜி.ஆருக்கு அது இருந்தது. அதனால் அவருக்கு பொதுமக்களின் ஆதரவு இருந்தது. மண்ணை வெல்வதற்கு முன்பு மக்களின் மனதை வெல்ல வேண்டும். மக்களின் இதயத்திற்கு நெருக்கமாக இறங்கி செல்ல வேண்டும். இது ஒரு நாள், இரண்டு நாளில் நடக்கிற காரியமல்ல. பத்து ஆண்டுகளில் பயணம் செய்தால் தான், நெருங்க முடியும். அதை விஜய் செய்வார் என நம்புகிறேன்” என்றார்.    

சார்ந்த செய்திகள்

Next Story

முடிவிற்கு வந்த விஜய்யின் சாய்பாபா கோயில் சர்ச்சை

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
shoba explained vijay sai baba temple issue

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ரஷ்யாவில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இப்படத்தை முடித்துவிட்டு இன்னொரு படத்தில் நடிக்கவுள்ள விஜய், அந்த படம் முடிந்தவுடன் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்திருந்தார். இதனைக் கடந்த பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய போது அறிக்கை மூலம் தெரிவித்திருந்த அவர், தற்போது திரைப்படங்களில் நடித்துக்கொண்டே கட்சி பணிகளையும் கவனித்து வருகிறார். விஜய்யின் அடுத்த படத்தை அ.வினோத் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனிடையே கடந்த 8ஆம் தேதி, த.வெ.க.வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விஜய் சாய் பாபா கோயிலில் இருக்கும் புகைப்படத்தை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் பல்வேறு கேள்விகளையும் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியது. பின்பு புஸ்ஸி ஆனந்த் திடீரென்று அப்புகைப்படத்தை அவரது எக்ஸ் பக்கத்திலிருந்து நீக்கினார். இது சர்ச்சையைக் கிளப்ப அப்புகைப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வந்தது. கொரட்டூரில் விஜய்க்கு சொந்தமான 8 கிரவுண்ட் நிலத்தில் அவருடைய தாயார் ஷோபாவிற்காக 'சாய்பாபா மந்திர்' என்று ஒரு கோயில் கட்டி உள்ளதாகவும், விஜய்க்கு சொந்தமாக சாலிகிராமத்தில் இருக்கும் ஷோபா திருமண மண்டபம் உள்ள இடத்தில் முதலில் கோவில் கட்ட ஏற்பாடு செய்து, அங்கு போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் அந்த முடிவு மாற்றப்பட்டு கொரட்டூரில் கட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது.

shoba explained vijay sai baba temple issue

இதனிடையே சாய்பாபா கோவில் ஒன்றுக்கு நடிகர் விஜயின் தாய் ஷோபனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் கும்பாபிஷேகம் செய்து வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகியிருந்தது. இந்த நிலையில் இந்த கோயில் சர்ச்சைக்கு விளக்கமளிக்கும் வகையில் சோபா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அந்த சாய்பாபா கோவில் தரிசனம் மேற்கொண்ட ஷோபா, ரொம்ப நாளாக விஜய்யின் சொந்த இடத்தில் ஒரு சாய்பாபா கோயில் கட்ட ஆசையாக இருப்பதாக விஜய்யிடம் சொல்லிவந்ததாகவும், அதன்படி அவர் கட்டிக்கொடுத்துவிட்டதால் வியாழன் தோறும் அந்த கோயிலுக்கு வந்து தரிசனம் மேற்கொண்டு வருவதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார். இவர் கூறியது ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கும், அந்த புகைப்படத்தால் எழுந்த சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Next Story

மங்காத்தா செண்டிமெண்டில் வெளியாகும் விஜய்யின் ‘தி கோட்’

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
vijay the goat movie release update

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. தொடர்ந்து கடைசியாக கேரளாவில் நடந்து முடிந்தது. காவலன் படத்திற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து கேரளாவிற்கு விஜய் சென்றதால் அவருக்கு உற்சாக வரவேற்பு கேரள ரசிகர்களால் கொடுக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்திலும் அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் அவர்களிடம் விஜய் மலையாளத்தில் பேசிய வீடியோக்களும் வைரலானது.

இதையடுத்து கடந்த 3ஆம் தேதி படத்தில் நடித்து வரும் பிரபு தேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி போஸ்டர் ஒன்றையும், கடந்த 6ஆம் தேதி பிரஷாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டது. இதனிடையே ரஷ்யாவில் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியது. அண்மையில் அங்கு, படப்பிடிப்பில் விஜய் விளையாடும் சிறிய வீடியோ ஒன்று வெளியானது.

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதிர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளார்கள். விஜய்யும் அந்த போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 2011ஆம் ஆண்டு அஜித்தை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படமும் அந்தாண்டு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது