ADVERTISEMENT

ஐ.ஐ.டி.யில் தீண்டாமை சுவர்? -போராட்டத்தில்  ‘ஒடுக்கப்பட்ட’ மக்கள்! Exclusive

08:44 PM Dec 26, 2019 | kalaimohan

பேராசிரியர்களின் அழுத்தம் காரணமாக முஸ்லிம் மாணவி ஃபாத்திமா தற்கொலை செய்துகொண்டது இதயத்தில் ஈட்டியாய் பாய்ந்துகொண்டிருக்கும்போதே, ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்படுத்திவந்த வழியை அடைத்து தீண்டாமைச் சுவரை எழுப்பியதாக மீண்டும் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறது சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம்.

ADVERTISEMENT


ADVERTISEMENT

இதுகுறித்து, விசாரிக்க சென்னை வேளச்சேரி காந்திசாலையிலுள்ள ஐ.ஐ.டி. பின்புற நுழைவாயில் பகுதிக்கு நாம் சென்றபோது, சுவர் எழுப்பியும் மர மற்றும் இரும்புக்கதவுகள் போட்டும் மூடப்பட்டிருந்தது. இதனால், ஐ.ஐ.டி. மாணவர்களுக்காக வைக்கப்பட்ட ஸ்டேஷனரி கடைகள், ஜெராக்ஸ் கடைகள், தேநீர் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு கிடந்தன. அக்கம்பக்கத்தில் வசிக்கும் பொதுமக்களிடம் விசாரித்தோம். மூடப்பட்ட சுவர் அருகேயுள்ள வீட்டின் பெண்மணி லலிதா நம்மிடம், “என்னோட ரெண்டுபிள்ளைங்களுமே ஐ.ஐ.டிக்குள்ள இருக்கிற வனவானி ஸ்கூலில்தான் படிக்கிறாங்க. பையன் பன்னிரெண்டாவது படிக்கிறான். பொண்ணு பத்தாவது படிக்கிறா. இந்த வழியை பயன்படுத்த 600 ரூபாய் கொடுத்து பாஸ் கூட வாங்கி வெச்சிருக்கோம். தினமும் இந்த வழியாத்தான் என் ரெண்டு பசங்களுமே ஸ்கூலுக்கு போவாங்க.


இப்போ, திடீர்ன்னு மூடிட்டா எங்க பிள்ளைங்க எப்படி ஸ்கூலுக்கு போவாங்க? வேளச்சேரி மெயின் ரோட்டிலுள்ள இன்னொரு கேட் வழியா போகச் சொல்வாங்க. ஆனா, காலையில 7:30 மணிக்கு ஸ்கூலில் இருக்கவேண்டியிருக்கும். வேளச்சேரி மெயின்ரோடு வழியோ பயங்கர ட்ராஃபிக்கா இருக்கும். கிட்டத்தட்ட 20 டூ 25 மினிட்ஸ் சுத்தி போகவேண்டியிருக்கும். தரமணியை சுற்றினாலும் மூன்றை கிலோமிட்டர் தூரம். ரெண்டு பிள்ளைங்களுமே பப்ளிக் எக்ஸாம் எழுதப்போற நேரத்துல இப்படி திடீர்ன்னு மூடிட்டாங்க. என்ன காரணம்னுக்கூட சொல்லமாட்றாங்க” என்று குமுறி வெடிக்கிறார்.


அப்பகுதியைச்சேர்ந்த கன்னியம்மாள் மற்றும் மாலா ஆகியோரோ, “பல வருடங்களா திறந்துதான் இருந்தது. பொதுமக்கள் எல்லோரும் போயிட்டு வந்துக்கிட்டுத்தான் இருந்தோம். ஐ.ஐ.டிக்குள்ள தற்காலிக வேலை செய்யுற ஆட்கள் எல்லோருமே இந்த வழியாகத்தான் போவாங்க. ஆனா, கடந்த 2019 டிசம்பர்- 24 ந்தேதி இரவு திடீர்ன்னு மூடப்பட்டது எல்லோருக்கு அதிர்ச்சியாகிவிட்டது. இப்போ, வேலைக்குப்போறவங்க எல்லாம் வண்டிய எடுத்துக்கிட்டு பெட்ரோல் போட்டுக்கிட்டு வேற வழியாக போகவேண்டியிருக்கும். என்னக்காரணத்தினால மூடினாங்கன்னும் சொல்லமாட்றாங்க” என்கிறார்கள் வேதனையுடன்.

அதேப்பகுதியைச்சேர்ந்த ஆல் இண்டியா ஃபெடரேஷன் ஆஃப் எஸ்.சி., எஸ்.டி., பி.சி., மைனாரிட்டிஸ் மற்றும் எம்ப்ளாயி வெல்ஃபர் அசோசியேஷன் அமைப்பின் உதவி பொதுச்செயலாளர் சண்முகம் சொல்லும் தகவல்கள் தடுப்புச்சுவர் எழுப்பி மூடப்பட்டதன் பின்னணியை விவரிக்கிறது, “வேளச்சேரியின் பூர்வீகமே இந்தப்பகுதிதான். சர்வே நம்பர்-1 இதுதான். 1956-ல் கல்விக்காக அரசாங்கம் கையகப்படுத்தியபோது இங்குள்ள மக்களை வேறு இடத்துக்கு மாற்றினார்கள். அதற்குப்பிறகுதான், ஐ.ஐ.டி. கட்டப்பட்டது. பின்னால், விடுதியும் கட்டப்பட்டது. கிண்டி ஐ.ஐ.டி. மெயின் கேட், வேளச்சேரி குருநானக் கல்லூரி அருகிலுள்ள மெயின் ரோடு கேட், வேளச்சேரி காந்திரோடு கேட், தரமணி கேட், கானகம் பகுதியிலுள்ள ஆராய்ச்சி பூங்கா கேட் என ஐந்து நுழைவாயில்கள் உள்ளன. ஆனா, ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகமாக வசிக்கும் வேளச்சேரி காந்திரோடு கேட்டை மட்டும் மூடிட்டாங்க.


இந்த, ஐ.ஐ.டி. கட்றதுக்காக 150 ஏக்கர் நிலத்தைக் கொடுத்தவர்கள் இந்தப் பகுதியிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள்தான். ஆனா, நாங்களே இப்போ இந்த வழியா போக முடியாத அளவுக்கு ‘தீண்டாமை’ சுவர் எழுப்பிட்டாங்க. 2004-லேயே இந்த கேட்டை மூடப்பார்த்தார்கள். ஆனால், அப்போதே போராடித் தடுத்தோம். இப்போது, மீண்டும் மூடிவிட்டார்கள். ஐந்தடிக்கு சுவரும் எழுப்பிவிட்டார்கள். அதை, மறைக்க மரக்கதவையும் வைத்து அடைத்துவிட்டார்கள்.

ஐ.ஐ.டிக்குள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா மற்றும் பணியாளர்களால் நடத்தப்படும் வனவானி பள்ளி என்று இரண்டு பள்ளிகள் உள்ளன. இந்தப் பகுதியைச்சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பிள்ளைகள் படிக்கிறாங்க. ஒரு நாளைக்கு 1000 பேர் இந்த வழியாக வேலைக்குப் போறாங்க. ஹவுஸ் கீப்பிங்கில் ஆரம்பித்து கூலி வேலைன்னு ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்கள்தான் இந்த வழியை அதிகமா பயன்படுத்துறாங்க. இங்க, இருக்கிற கடைகளுக்கு உள்ளேயிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து ஜெராக்ஸ் எடுக்கிறது, டீ சாப்பிடுறது, டிஃபன் சாப்பிடுறதுன்னு குறைந்த விலையில் பயன் அடைஞ்சுக்கிட்டிருந்தாங்க. மக்களோடு பேசி பழகுவாங்க. ஆனா, இதையெல்லாத்தையும் இந்த சுவர் எழுப்பி தடுத்து நிறுத்திட்டாங்க.


ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தியின் மனைவி விஜயலட்சுமி கேம்பஸ் வெல்ஃபர் ட்ரஸ்ட்ன்னு ஒன்னு வெச்சுக்கிட்டு ஐ.ஐ.டிக்குள்ள சட்டத்துக்குப்புறம்பான அத்தனை வேலைகளையும் செய்து பணம் சம்பாதிக்கிறாங்க. அதாவது, படிச்சு முடிச்சுட்டு போற பசங்க தங்களோட பைக், சைக்கிள், பெட், சேர் உள்ளிட்ட பொருட்களை எல்லாம் விட்டுட்டுப்போயிடுவாங்க. இந்த மாதிரி, இங்க இருக்கிற பொருட்களை எல்லாம் விற்று காசு பார்ப்பது இயக்குனரின் மனைவிதான். இந்த, வளாகத்தில் மீதமாகுற உணவுகளை மான்கள், குரங்குகள் சாப்பிட்டுக்கிட்டிருந்ததை டன் கணக்கா கொண்டுபோயி காட்டாங்குளத்தூரிலுள்ள பன்றிப் பண்ணைக்கு ஏற்றுமதி செய்து விற்பனை செய்துவருகிறார். இரவு 11 மணிக்கு மேல இப்படி நடக்குது.

இதையெல்லாம், இப்பகுதி மக்கள் பார்த்துக்கிட்டிருக்கோம். ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்றவங்களுக்கு சம்பளம் அதிகமா வேணும்னு நாங்க எல்லாம் கோரிக்கை வச்சு புகார் கொடுக்கிறோம்னுதான் இந்த கேட்டை மூடிட்டாங்க. இந்த, கேட் பொதுமக்கள் பயன்பாட்டுக்கானதுன்னு இடம் கொடுக்கும்போதே பைலாவுல இருக்கு. அதையும் மீறி ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கிற கேட் என்பதற்காக மூடிட்டாங்க” என்று குற்றஞ்சாட்டுகிறார்.


ஐ.ஐ.டி. நிர்வாகமோ இந்த கேட் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் சப்ளை ஆவதால் மூடிவிட்டோம் என்கிறது. ஆனால், காந்திசாலை பகுதி மக்களோ, தரமணி ‘கேட்’கிட்ட கஞ்சா விற்றுக்கொண்டிருந்தவனை சமீபத்துல போலீஸ் புடிச்சாங்க. கிலோ கணக்குல கண்டுபுடிச்சாங்க. ஆனா, அந்த கேட்டைக்கூட மூடல. இங்க, கஞ்சா விற்றதாக எதுவும் நிரூபிக்கப்படாமலேயே கேட்டை மூடிட்டாங்க. கஞ்சாவோ போதைப்பொருளோ விற்பனை ஆகுதுன்னா செக் பண்ணி அனுப்புற வேலைதானே செக்யூரிட்டிங்க வேலை? அதைவிட்டுட்டு கேட்டை மூடலாமா? அப்படின்னா, மூடப்படாத கேட் வழியா கஞ்சா போகாதா? ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கிற பகுதின்னா அவ்வளவு இளக்காரமா? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

கோவை மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்துவிழுந்து 17 பேர் மரணமடைந்த சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்தது. ஐ.ஐ.டி. ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் சுவரை எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் இச்சுவற்றை அகற்ற போராட்டத்தில் இறங்க இருப்பதாகத் தெரிவித்தார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT