ADVERTISEMENT

“கல்வியியல் துறை குப்பை டிபார்ட்மெண்ட்” - பல்கலை துணைவேந்தர் பரபரப்பு பேச்சு

02:33 PM Aug 24, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

''பெரியார் பல்கலையில் இயங்கி வரும் கல்வியியல் துறை ஒரு குப்பை டிபார்ட்மெண்ட்; ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்துவதில்லை'' என பொது நிகழ்ச்சியில் துணைவேந்தர் ஜெகநாதன் பகிரங்கமாக கூறியது, பேராசிரியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் பெரியார் பல்கலை செனட் அரங்கில் ஆக. 21ம் தேதி, 'கற்பித்தல், கற்றல் துறையில் புதிய முயற்சிகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பஞ்சநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கற்பித்தல் தொடர்பான கருத்தரங்கம் என்றாலும், வழக்கம்போல் 60க்கும் குறைவான உதவி/ இணை/ பேராசிரியர்களே கலந்து கொண்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சி, ஒரு கோப்பை தேநீர், ஒரு மெதுவடையுடன் பகல் 12.45 மணிக்கு நிறைவு பெற்றது.

துணைவேந்தர் ஜெகநாதன் தலைமை உரையாற்றினார். அவர் பேசுகையில், “ஆசிரியர்கள் அந்தந்த காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை அப்டேட் செய்து கொண்டு, கற்பித்தல் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். எப்போதும் தனித்துவமாக செயல்பட வேண்டும். என் மகள் பிளஸ்2 படிக்கும்போது, அவருக்கு எந்த சந்தேகம் என்றாலும் ஆசிரியரிடம் தொடர்பு கொண்டு பேசுவார். அவர்களும் ஆர்வத்துடன் சந்தேகத்தை நிவர்த்தி செய்வார்கள். அவர்கள் திறமைசாலிகள் மட்டுமின்றி, கற்பித்தல் பணியில் சின்சியர் ஆகவும் இருந்தனர். அத்தகைய ஆசிரியர்களுக்கு சமூகத்தில் எப்போதும் மரியாதை உண்டு.

அண்ணா பல்கலையில் பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வுப் பணிகளில் நானும் கலந்து கொண்டு, ஆய்வு தொடர்பான உதவிகளைச் செய்திருக்கிறேன். நான் பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்திலும், இப்போதும்கூட அதே ஆர்வத்துடனும், தனித்துவத்துடனும் தான் இருக்கிறேன்” என சொந்த அனுபவங்களைப் பேசினார். அவருடைய பேச்சை, பல்கலை ஆசிரியர்களும் வெகுவாக கரவொலி எழுப்பி ரசித்தனர்.

இந்நிலையில்தான் துணைவேந்தர் ஜெகநாதன் திடீரென்று, “இதைச் சொல்வதற்காக வருந்துகிறேன். இங்குள்ள கல்வியியல் துறை ஒரு குப்பை டிபார்ட்மெண்ட்னுதான் சொல்லுவேன்” என்று அதே கருத்தை இரண்டு முறை அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

அப்போது அவர் மேடையில் இருந்தபடியே, “இந்த அரங்கத்தில் கல்வியியல் துறையில் இருந்து யாராவது வந்திருக்கிறீர்களா” எனக் கேட்டார். அப்போது பார்வையாளர் பகுதியில் இருந்து கல்வியியல் துறை உதவி பேராசிரியர் ஹேமா என்பவர் கையை உயர்த்தினார். அவரைப் பார்த்த பிறகும் துணைவேந்தர், “கல்வியியல் துறையில் ஆசிரியர்கள் யாரும் ஒழுங்காக வகுப்புகள் எடுப்பதில்லை. அதனால்தான் அந்த துறையில் அட்மிஷனே வர மாட்டேங்குது” என்றார். இதைக் கேட்ட அந்த உதவி பேராசிரியர் ஹேமா மட்டுமின்றி, கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து ஆசிரியர்களும் சற்று நெளிந்தனர்.

சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த கல்வியல் பல்கலை முன்னாள் துணைவேந்தர் பஞ்சநாதன், பொது மேடையில் துணைவேந்தர் ஜெகநாதன் இப்படியொரு கருத்தை முன்வைத்தபோது, அவர் எந்தவித ரியாக்‌ஷனும் காட்டாமல் அமர்ந்து இருந்தார்.

இது தொடர்பாக பெரியார் பல்கலை பேராசிரியர்கள் சிலர் கூறுகையில், “ஆசிரியர்கள் திறன் வாய்ந்தவர்களாகவும், தனித்துவமாகவும் செயல்பட வேண்டும் என்று ஊக்கப்படுத்தும் தொனியில்தான் துணைவேந்தர் ஜெகநாதன் பேசினார். ஆனால் அதற்காக குப்பை டிபார்ட்மென்ட் என்றும், யாருமே சரியாக பாடம் நடத்துவதில்லை என்றும் பொது மேடையில் பேசியதை நாகரீகமாக தவிர்த்து இருந்திருக்கலாம். அதுதான் எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

பெரியார் பல்கலைக்கு 'ஏ பிளஸ் பிளஸ்' அந்தஸ்து கிடைத்திருப்பதற்கு ஆசிரியர்கள்தான் காரணம் என்றும் அதே மேடையில்தான் பெருமையாக பேசினார். ஒரு துறையே குப்பையாக இருக்கிறது என்றால், 'ஏ பிளஸ் பிளஸ்' அந்தஸ்து கிடைத்திருக்குமா? என்று அவர் சிந்திக்காமல் பேசிவிட்டார்” என்றனர்.

அதேநேரம், சிறப்பு அழைப்பாளர் பஞ்சநாதன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அவருடைய பேச்சு சுவாரஸ்யமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது என்றும் பேராசிரியர்கள் கூறினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT