ADVERTISEMENT

விவசாயத்தில் புதிய கண்டுபிடிப்பு; 2024ஆம் ஆண்டிற்கான 20 புதிய பயிர் ரகங்கள் வெளியீடு

11:51 AM Feb 06, 2024 | ArunPrakash

கோவை மாவட்டம், காந்திபுரம் அருகே அமைந்துள்ளது பிஎன் புதூர். இப்பகுதியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து ஆண்டு தோறும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்படும். அந்த வகையில், கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி 2024 ஆம் வருடத்திற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் 18 கல்லூரிகள், 40 ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் 15 வேளாண் அறிவியல் நிலையங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு தட்ப வெப்ப பகுதிகளுக்கு ஏற்ப புதிய ரகங்கள் உருவாக்குவது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதன் மூலம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் இருந்து ஆண்டு தோறும் விவசாயிகளின் பயன்பாட்டுக்காக புதிய ரகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வேளாண் பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் உள்ளடக்கிய புதிய ரகங்கள், தமிழ்நாடு அரசின் மாநில பயிர் ரகங்கள் வெளியீட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

அந்த வகையில், நடப்பு ஆண்டிற்கான 20 புதிய பயிர் ரகங்களை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி வெளியிட்டார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மேலாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி, ''ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகளின் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்படுகிறது. இதுவரை பல்வேறு பயிர்களில் 905 ரகங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. நடப்பாண்டு வேளாண் பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் உள்ளடக்கிய சுமார் 20 புதிய ரகங்கள், தமிழ்நாடு அரசின் மாநில பயிர் ரகங்கள் வெளியீட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கு 20 புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். அதில், வேளாண் பயிர்களில் நெல்லில் இருவழி வீரிய ஒட்டு ரகம் மற்றும் பாசுமதி அல்லாத வாசனை கொண்ட நீள் சன்ன ரகம் என இரண்டு ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல, தானிய பயிர்களில் இனிப்புச் சோளம் உட்பட நான்கு புதிய ரகங்களும், எண்ணெய் வித்துக்கள், பருத்தி மற்றும் பசுந்தாள் உரப்பயிர் போன்ற பயிர்களில் தலா ஒரு ரகமும் வெளியிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலன்களையும் கருத்தில் கொண்டோம். அவர்களுக்கு என்றே, தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் வகைகளில் பன்னீர் திராட்சை, பலா, வாழை என மூன்று பழப்பயிர்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். மேலும், இந்த முறை கத்திரி, கொத்தவரை, வெள்ளைத்தண்டுக்கீரை, சிவப்புக்கீரை மற்றும் முருங்கை என ஐந்து காய்கறி பயிர்களும் வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் சிவப்புப் புளி, தென்னை வகைகளில் புதிய ரகம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த 2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய பயிர் ரகங்களை விவசாய பெருமக்கள் சாகுபடி செய்து பயன்பெறுமாறு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதையடுத்து பேசிய விவாசயிகள், ''தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறை நாங்கள் இந்த பயிர் ரகங்களை விளைவிக்க ஆவலுடன் உள்ளோம். தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ற வகையில் ரகங்களை கண்டுப்பிடிக்க வேண்டும்'' என கோரிக்கை வைத்தனர். இந்த நிகழ்வில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறையை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT