ADVERTISEMENT

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி முத்திரை தயாரித்து நகை, பணம் மோசடி செய்த  இருவர் கைது! 

12:30 PM Nov 06, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த மாயகிருஷ்ணன் மகன் மாயமணி(34) என்பவருக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பிரிவில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த வரக்கால்பட்டை சேர்ந்த அருள் மகன் பிரபு(30) மற்றும் பொதுமக்களுக்கு மனு எழுதிக் கொடுத்து வந்த விருத்தாசலம் நாச்சியார்பேட்டையை சேர்ந்த மணி என்பவருடைய மனைவியான மாற்றுத்திறனாளி பெண் லட்சுமி(46) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.

அந்த பழக்கத்தின் அடிப்படையில் லட்சுமியும், பிரபுவும், 'நாங்கள் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளோம். உங்களுக்கும் வேலை வாங்கித் தர வேண்டுமா?' என மாயமணியிடம் கேட்டுள்ளனர். அதற்கு மாயமணி தனக்கு அரசு அலுவலகங்களில் ஏதாவது ஒரு வேலை வாங்கிக் கொடுக்கும்படி கூறியுள்ளார். வேலை வாங்கிக் கொடுக்க வேண்டுமானால் தங்களுக்கு ரூபாய் 3 லட்சம் தர வேண்டுமென பிரபுவும், லட்சுமியும் கேட்டுள்ளனர்.

அதற்கு, பணம் இல்லை என கூறிய மாயமணி, வீட்டில் இருந்த நகைகளை எடுத்து லட்சுமியிடம் கொடுத்து அதனை ரூ.3 லட்சத்திற்கு அடகு வைத்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். அதன்படி லட்சுமி, மாயமணி கொடுத்த நகைகளை அடகு வைத்து பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.


இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சுமியும், பிரபுவும் மாயமணியிடம் உங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பிரிவில் உதவியாளர் வேலை கிடைத்துள்ளது என்று கூறி அதற்கான ஆணையை கொடுத்துள்ளனர். அந்த ஆணையை பெற்றுக்கொண்ட மாயமணி, கலெக்டர் அலுவலகம் சென்று அங்கிருந்த அதிகாரியிடம் ஆணையை கொடுத்தார். ஆணையைப் பெற்ற அதிகாரி அது போலியானது என்பதை அறிந்து உடனே மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு போலீசார் மாயமணியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மாயமணிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 லட்சம் பெற்றுக்கொண்டு லட்சுமியும், பிரபுவும் போலி முத்திரைகளை பயன்படுத்தி வேலைக்கான ஆணையை தயார் செய்து கொடுத்தது தெரியவந்தது.

மேலும் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் சென்றதையடுத்து அவரது உத்தரவின்பேரில் வழக்குப்பதிவு செய்து லட்சுமி, பிரபு இருவரையும் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து ரூ.1 லட்சம் பணம், நகைகள் மற்றும் போலி முத்திரைகளை பறிமுதல் செய்தனர்.



இந்நிலையில் லட்சுமி, பிரபு ஆகியோர் வேலை கேட்டு வருபவர்களிடம் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே மேலும் யார் யாரிடம் இதுபோன்று வேலைக்காக பணம் வாங்கி உள்ளனர் என்பது குறித்தும், இதில் வேறு சிலருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT