ADVERTISEMENT

கரும்பு தோட்டத்தில் ஒரு கோடியை பதுக்கிய விவசாயி - போலீசார் விசாரணையில் ட்விஸ்ட்

09:30 AM Dec 12, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சில தினங்களுக்கு முன் சேலத்தில் விவசாயி ஒருவர் தனது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டதாக புகார் அளித்திருந்தார். இந்த சம்பவத்தில் விவசாயியே கரும்பு தோட்டத்தில் பணத்தை மறைத்து வைத்துவிட்டு கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது சார்வாய் புதூர் சாமியார் கிணறு என்கின்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி லோகநாதன். அதே தலைவாசல் பகுதியில் உள்ள மணிவிழுந்தான் என்ற பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் ரியல் எஸ்டேட் அதிபராக இருந்தார். இவரது மகன் கோபாலகிருஷ்ணன். இவர்கள் இருவரும் இரண்டு கோடி ரூபாய் பணத்தை ரொக்கமாக விவசாயி லோகநாதனிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கூறியுள்ளனர். இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி வீட்டை பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்க்கையில் வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் ரொக்கத்தையும் மர்மநபர்கள் திருடி சென்றதாக லோகநாதன் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

இது தொடர்பாக காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் விவசாயி லோகநாதன் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தனது வீட்டின் அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் லோகநாதன் பணத்தை மண்ணில் புதைத்து வைத்தது தெரியவந்தது. ரியல் எஸ்டேட் அதிபர் கொடுத்த பணத்தை அபகரிக்கும் நோக்கில் பணத்தை மறைத்து வைத்துவிட்டு பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டதாக லோகநாதன் நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT