ADVERTISEMENT

இலை, தழைகளைக் கட்டிக்கொண்டு அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!

09:54 PM Apr 19, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று (19/04/2021) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்கள் உடலில் இலை, தழைகளை கட்டிக் கொண்டு, 'மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உர விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்', 'விவசாயத்திற்கு 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்', 'விளைபொருள்களுக்கு லாபகரமான விலை வழங்கிட வேண்டும்', 'அகிம்சை வழியில் டெல்லி சென்று போராட அனுமதி மறுக்கும் காவல்துறையைக் கண்டித்து'ம் கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.

இதனிடையே, விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இலை, தழைகளை கட்டிக்கொண்டு, அரை நிர்வாணத்துடன் திருச்சி- கரூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட ஊர்வலமாக வந்தபோது, அவர்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அண்ணாமலை நகர் பகுதியில் திருச்சி - கரூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

"காவல்துறை எங்களுக்கு ஒரு வாரத்திற்குள் அனுமதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். எங்கள் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கா விட்டால் மீண்டும் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்" என அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT