ADVERTISEMENT

புயலில் இழந்த மரங்களை மீட்க நெடுஞ்சாலையில் நடப்பட்ட மரக்கன்றுகள் கவனிப்பின்றி கருகும் அவலம்

11:06 PM Mar 03, 2020 | kalaimohan

கடந்த 2018 நவம்பர் 16 ந் தேதி அதிகாலை புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களை கஜா புயல் புரட்டிப் போட்டது. விடியும் போது ஒட்டு மொத்த மரங்களும், மின்கம்பங்களும், விளை பயிர்களும், வீடுகளும் உடைந்து தரைமட்டமாக கிடந்தது. வீட்டைவிட்டு வெளியே போக வழியில்லை. மொத்த வாழ்க்கையும் அழிந்துவிட்டதாக உணர்ந்தார்கள் மக்கள்.

சில மணி நேரம் அமைதியாக இருந்த இளைஞர்கள் அரிவாளுடன் களமிறங்கினார்கள். சாலைகளில் விழுந்துகிடந்த மரங்களை வெட்டி அகற்றினார்கள். சில நாட்களில் மொத்த போக்குவரத்தையும் விட்டனர். அத்தோடு நிற்காமல் இழந்த மரங்களை மீட்க வேண்டும் என்பதை உணர்ந்த இளைஞர்கள் கிராமங்கள் தோறும் அடுத்தடுத்து லட்சக் கணக்கில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கத் தொடங்கினார்கள். நீடாமங்கலம் பகுதியில் வேகமாக வளரக் கூடிய மரப்போத்துகளை நட்டு வளர்த்து வருகின்றனர். அதன் பிறகு எந்த ஒரு விழா என்றாலும் மரக்கன்றுகள், விதைப் பந்துகள் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சமீபத்தில் கூட அமைச்சர் விஜயபாஸ்கர் தனக்கு யாரும் சால்வை அணிவிக்க வேண்டாம். மரக்கன்றுகள் நட்டு வளருங்கள் என்றார். இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தில் சாலை ஓரங்களில் நின்ற ஆயிரக்கணக்கான புளி, ஆல், அரசு, வேலா போன்ற மரங்கள் சாய்ந்துவிட்டதையறிந்து கிராமங்கள் தோறும் இளைஞர்கள் மரக்கன்றுகுள் நடப்படுவதைப் பார்த்து நெடுஞ்சாலை ஓரங்களில் உயரமான மரக்கன்றுகளை நட்டு ரூ. 50 செலவில் கூண்டுகளை வைத்து பாதுகாப்பதுடன் வாரத்தில் சில நாட்கள் தண்ணீர் ஊற்றினார்கள் நெடுஞ்சாலைப் பணியாளர்கள். அதனால் அந்த மரக்கன்றுகள் வேகமாக வளரத் தொடங்கியது. இதை நக்கீரன் உள்பட பல பத்திரிகைகளும் செய்திகாள வெளியிட புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் மரக்கன்றுகளை நெடுஞ்சாலை ஓரங்களில் நட்டனர். அப்போது மழை பெய்தது. கூண்டு அமைத்து சில நாட்கள் தண்ணீர் ஊற்றினார்கள்.

தற்போது.. ஆலங்குடிக்கு கிழக்கு பகுதியில் வழக்கம் போல தண்ணீர் ஊற்றப்படுகிறது. ஆனால் ஆலங்குடிக்கு மேற்கே விராலிமலை வரை கன்றுகளுக்கு தண்ணீரும் ஊற்றவில்லை. கன்றுகளை பராமரிக்கவும் இல்லை. கூண்டுகள் உடைந்து கிடக்கிறது. தண்ணீர் இன்றி மரக்கன்றுகள் வாடி வதங்கி கருகிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இளைஞர்கள் நட்ட மரக்கன்றுகளை பாதுகாத்து வருகிறார்கள். நெடுஞ்சாலை ஓரங்களில் இழந்த மரங்களை மீட்க பல லட்சம் அரசுப் பணத்தை எடுத்து செலவிட்ட நெடுஞ்சாலைத்துறை நட்ட கன்றுகளை பராமரிக்காமல் இப்படி பாதியில் விட்டதால் அத்தனை மரக்கன்றுகளும் கருகும் நிலைக்கு வந்துவிட்டது.


கோடைக்கு வாரத்திற்கு ஒரு நாள் தண்ணீர் ஊற்றினால் கூட அந்தக் கன்றுகள் பிழைத்துக் கொள்ளும். இல்லை என்றால் அரசாங்க பணம் அத்தனையும் இழப்பு தான். இதை அதிகாரிகள் உணர்ந்தால் நல்லது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் உயிர் போகும் நிலையில் உள்ள மரக்கன்றுகளை உயிர் காக்கலாம். திருவாரூர் மாவட்டத்தில் கிரீன் நீடா அமைப்பினர் சாலை ஓரங்களில் வைத்துள்ள மரபோத்துகள் நல்ல நிலையில் துளிர்விட்டுள்ளதால் கோடை வெயிலை சமாளிக்க லாரியில் கொண்டு வந்து தண்ணீர் ஊற்றுகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் பெரிய மரங்களாக வளரும். ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில்?

தனக்கு பரிசுக்கு பதிலாக மரக்கன்றுகள் கொடுங்கள், மரக்கன்றுகளை நட்டு வளருங்கள் என்று சொன்ன அமைச்சர் விஜயபாஸ்கரின் கல்லூரி இருக்கும் விராலிமலை சாலையில் மேட்டுச்சாலை பகுதியில் தான் அதிகமான மரக்கன்றுகள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. தினமும் அந்த வழியாக பயணிக்கும் அமைச்சர் அதை கவனிக்கவில்லை போல.. இனியாவது அந்த மரக்கன்றுகளின் உயிர் காக்க உத்தரவிட்டால் நல்லது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT