ADVERTISEMENT

டூரிஸ்ட் வாகனம் விபத்து: உயிர் சேதத்தை தவிர்க்க உதவியவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!

12:21 PM Oct 16, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம், தங்கள் உறவினர்கள் 22 பேருடன் கடந்த 11ஆம் தேதி கரூர் தாந்தோன்றிமலை நோக்கி டூரிஸ்ட் வேனில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது முக்கொம்பு அருகே, மினி கண்டெய்னர் லாரியை டூரிஸ்ட் வாகனம் முந்தி செல்ல முற்பட்டது. அதேவேளை, கரூரில் இருந்து திருச்சி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்தது. அதன் மீது மோதிவிடக்கூடாது என்பதற்காக டூரிஸ்ட் வாகனத்தை இயக்கிய ஓட்டுநர், சட்டென்று மினி கண்டெய்னர் லாரியை ஒட்டி தனது வாகனத்தை திருப்பியுள்ளார்.

மினி லாரி வந்துகொண்டிருந்த வேகத்திற்கு ப்ரேக் பிடிக்க முடியாமல், அந்த டூரிஸ்ட் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டூரிஸ்ட் வாகனத்தில் வந்த அனைவரும் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

அந்த விபத்தை நேரில் பார்த்த பொதுமக்களில் சிலரும், பொதுப்பணித்துறை ஊழியர்களும், ரோந்து வாகனத்தில் பணிபுரிந்த காவலர்களும் துரிதமாக செயல்பட்டு விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.

விரைந்து செயல்பட்டதால் உயிர்சேதம் ஏற்படவில்லை என அவர்களைப் பாராட்டி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா. மூர்த்தி விபத்தில் உதவியவர்களை நேரில் அழைத்து பாராட்டி, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT