ADVERTISEMENT

கழிப்பறை வசதியில்லாத மலைகிராமங்கள்...  தூய்மை இந்தியா திட்டம் நூறு சதவிகிதம் தோல்வி!

07:40 PM Nov 20, 2019 | kalaimohan

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், மலைகிராமமான மணலூர் ஊராட்சியில் பெரும்பாறை, புல்லாவெளி, புங்கப்பட்டி, பெரும்பாறைபுதூர் காலனி, மஞ்சள்பரப்பு உட்பட பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் தூய்மை இந்தியா திட்டம் மூலம் தனிநபர் கழிப்பறைகள் முறையாக கட்டிக் கொடுக்கப்பட்டன. குறிப்பாக புல்லாவெளி மற்றும் பெரும்பாறைபுதூர் காலனி பகுதியில் தனிநபர் கழிப்பறைகள் இன்றுவரை கட்டிக் கொடுக்கப்படவில்லை.

இன்றுவரை அப்பகுதி மக்கள் தாண்டிக்குடி செல்லும் சாலையை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். மழை வந்தால் மலம் கலந்த கழிவுநீர் தங்கள் வாசல் பகுதிக்கு வந்து தங்களுக்கு தொற்றுநோயை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். இதுதவிர தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தனிநபர் கழிப்பறைகள் என்னாச்சு என கேள்வி எழுப்புகின்றனர். இதுதவிர புல்லாவெளி, கொங்கபட்டி பகுதிகளில் கட்டப்பட்டுள்ள மகளிர் சுகாதார வளாகம் திறக்கப்படாமல் இருப்பதால் மலைகிராம பெண்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

மஞ்சள்பரப்பில் கடந்த கஜா புயலின்போது சேதமடைந்த பயணியர் நிழற்குடையை இன்றுவரை சீரமைக்காமல் இருப்பதால் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயத்தில் உள்ளனர். பெரும்பாறையை அடுத்த புதூர் பகுதிக்கு செல்ல முடியாத அளவிற்கு சாலையின் இரு ஓரங்களிலும் மலம் கலந்த கழிவுகள் இருப்பதால் அப்பகுதியில் செல்வோர் நடமாட முடியாமல் இருசக்கர வாகனத்திலும், வேன்கள் மூலம்தான் அப்பகுதியை கடக்கின்றனர். இதனால் புதூர் பகுதியில் வசிக்கும் மலைவாழ்மக்கள் தொற்று நோய்களுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்குள்ள மயானத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாத அளவிற்கு புதர்மண்டி கிடக்கிறது. கிராமங்களில் வைக்க வேண்டிய இரும்பு குப்பைத் தொட்டிகள் ஒட்டுமொத்தமாக பெரும்பாறை மருத்துவமனை முன்பு வைத்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் குப்பைக் கழிவுகளால் கொசுக்கள் உற்பத்தியாகி சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை மேலும் பல நோய்களை உருவாக்கி வருகிறது. தெருவிளக்கு வசதி, வடிகால் வசதி இல்லாமல் அவதிப்படும் மணலூர் ஊராட்சி மலைவாழ் மக்கள் தங்களுக்கு கழிப்பறை வசதி வேண்டும் என கடந்த மூன்று வருடங்களாக போராடியும் தங்கள் பகுதிக்கு ஒரு கழிப்பறை கூட கட்டிக் கொடுக்கவில்லை என புகார் செய்கின்றனர். தூய்மை இந்தியா திட்டம், திறந்தவெளியில் மலம் கழித்தலை ஒழித்தல் திட்டம் என பல்வேறு திட்டங்கள் போட்டாலும் மலைவாழ் மக்களுக்கு ஒரு திட்டம் கூட போய் சேருவதில்லை.

ஊராட்சி நிர்வாகம் முறையாக செயல்படாததால் மலைகிராம மக்கள் கடும் வேதனையிலும், தொற்றுநோய் பாதிப்பிலும் கண்ணீர் விடுகின்றனர். மாவட்ட திட்ட இயக்குநர் ஒரு முறையாவது தாங்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து தனிநபர் கழிப்பறை இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்,அப்போது தான் நாங்கள் படும் கஷ்டம் தெரியும் என கூறுகின்றனர். மேலும் தரைப்பகுதி கிராமங்களில் கூட்டுக் கழிப்பறைகள் கட்டி பொது சுகாதாரம் காக்கும் மாவட்ட நிர்வாகம் தங்கள் பகுதியிலும் கூட்டுக்கழிப்பறைகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் இந்த விசயத்தில் தனி கவனம் செலுத்தி ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணலூர் ஊராட்சியில் உள்ள புல்லாவெளி, கொங்கபட்டி, பெரும்பாறைபுதூர் பகுதியில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட 250 கழிப்பறைகள் என்னாச்சு? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். மத்திய அரசு எத்தனை தூய்மை இந்தியாதிட்டங்கள் கொண்டு வந்தாலும் ஆத்தூர் ஒன்றியத்தில் மட்டும் படுதோல்வி அடைந்து வருவது வேதனை அளிக்கிறது.

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT