ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் 79.23 சதவீதம் வாக்குப்பதிவு!

01:53 AM Apr 07, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


தமிழக சட்டமன்றத் தேர்தலில், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் சராசரியாக 79.23 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஏப். 6) வாக்குப்பதிவு நடந்தது. காலை 07.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் வாக்குப்பதிவு நடந்து. வழக்கமாக மாலை 05.00 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடத்தப்படும். கரோனா பரவல் காரணமாக இந்தமுறை முதன்முதலாக கூடுதலாக 2 மணி நேரம் நீட்டித்து, இரவு 07.00 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மாலை 06.00 மணி முதல் இரவு 07.00 மணி வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும், 99 சதவீத தொகுதிகளில் கரோனா நோயாளிகளின் வருகை அவ்வளவாக இல்லாததால், சாதாரண வாக்காளர்கள் வந்தாலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, மொத்தம் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை முதல் மாலை வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது.

மாற்றுத்திறனாளிகள், முதியோர்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அழைத்து வர வசதியாக சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டு இருந்தது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் வாக்காளர்களுக்கு ஒரு கைக்கு மட்டும் கையுறையும், முகக்கவசமும் வழங்கப்பட்டது. வாக்களிக்கச் செல்லும் முன்பு ஒவ்வொரு வாக்காளரும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்பட்டது.

கரோனா தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. கரோனா நோயாளிகள் வாக்களிக்க வரும்போது, அவர்கள் அணிந்து கொள்ள பிபிஇ கிட் உடையும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் உள்ளூர் காவல்துறையினருடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரம்:

கெங்கவல்லி (தனி) சட்டமன்றத் தொகுதி:

கெங்கவல்லி (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 351 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 238960 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 183907 பேர் வாக்களித்தனர். இத்தொகுதியில் மொத்தம் 76.96 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

ஆத்தூர் (தனி) சட்டமன்றத் தொகுதி:

ஆத்தூர் தனி தொகுதியில் 254635 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 196413 பேர் வாக்களித்து இருந்தனர். 77.14 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. மொத்தம் 346 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

ஏற்காடு (தனி) சட்டமன்றத் தொகுதி:

பழங்குடியினருக்கான ஏற்காடு தனி சட்டமன்றத் தொகுதியில் 408 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மொத்தம் 283916 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 236036 பேர் வாக்களித்துள்ளனர். 83.14 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

ஓமலூர் சட்டமன்றத் தொகுதி:

ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் 295894 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் மூன்றாம் பாலினத்தவர் 94 பேர் உள்பட மொத்தம் 246598 பேர் வாக்களித்துள்ளனர். 83.34 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி:

மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் 286620 வாக்காளர்கள் உள்ளனர். இதரர் 52 பேர் உள்பட மொத்தம் 217831 பேர் வாக்களித்துள்ளனர். 76 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

எடப்பாடி சட்டமன்றத் தொகுதி:

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 285205 வாக்காளர்கள் உள்ளனர். 244125 பேர் வாக்களித்துள்ளனர். 85.60 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

சங்ககிரி சட்டமன்றத் தொகுதி:

சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 274234 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 229550 பேர் வாக்களித்துள்ளனர். இத்தொகுதியில் 83.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி:

சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 299605 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 215429 பேர் வாக்களித்தனர். அதாவது, இத்தொகுதியில் மொத்தம் 71.90 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி:

சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 72.06 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 276022 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 198896 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி:

சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 260372 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் மொத்தம் 76 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. மொத்தம் 197890 பேர் வாக்களித்துள்ளனர்.

வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி:

வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 260006 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 222394 வாக்காளர்கள் உள்ளனர். 85.53 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

சேலம் மாவட்டம் முழுவதும் பெண் வாக்காளர்கள் 15 லட்சத்து 15019 பேரும், ஆண் வாக்காளர்கள் 15 லட்சத்து 246 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 204 மற்றும் மாற்றுத்திறனாளிகள் 204 பேரும் என மொத்தம் 30 லட்சத்து 15 ஆயிரத்து 469 பேர் உள்ளனர்.

இவர்களில் 12 லட்சத்து 10369 ஆண்களும், 1178496 பெண்களும், 44 மூன்றாம் பாலினத்தவர்கள், 160 மாற்றுத்திறனாளிகளையும் சேர்த்து மொத்தம் 23 லட்சத்து 89069 பேர் வாக்களித்துள்ளனர். அதாவது, மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் சராசரியாக 79.23 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. மொத்தம் 4280 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

கூட்ட நெரிசலை தவிர்க்க இம்முறை 1100 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு, புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு இருந்தன. மாவட்டத்தில் மிக அதிகபட்சமாக எடப்பாடி தொகுதியில் 85.60 சதவீதமும் குறைந்தபட்சமாக சேலம் மேற்கு தொகுதியில் 71.90 சதவீதமும் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

வாக்குப்பதிவு முடிந்ததும் கன்ட்ரோல் யூனிட், விவிபேட் இயந்திரம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஆகியவை பத்திரமாக மூடி சீல் வைக்கப்பட்டது. அவை அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதையடுத்து வரும் மே 2- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, தேர்தல் முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT