ADVERTISEMENT

நெருங்கும் தேர்தல்.... சேலத்தில் கட்சி கொடி தயாரிப்பு தொழில் ஜரூர்!

12:07 AM Feb 19, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, சேலத்தில் அரசியல் கட்சிகளின் கொடிகள் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு பிப். மாத இறுதியில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழகத்தில் நேரில் ஆய்வு செய்துவிட்டுச் சென்றார். இந்நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தமுறை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் ஜனவரி மாதமே தேர்தல் பரப்புரையைத் தொடங்கிவிட்டன.

காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் தனித்தனியாக பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகள் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், தனி ஆவர்த்தனமாக இரு முக்கிய கட்சிகளின் தலைவர்களும் பரப்புரையில் ஈடுபட்டு வருவதும் தமிழகத் தேர்தல் களம் இதுவரை காணாதது என்கிறார்கள் விமர்சகர்கள்.

இது ஒருபுறம் இருக்க, தேர்தல் என்றாலே திருவிழா போல அதைச் சார்ந்த சில தொழில்களுக்கும் பெரும் வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில், கட்சிக்கொடிகள் தயாரிக்கும் தொழில்கள் தேர்தல் காலத்தில் எப்போதும் பரபரப்பாக இருக்கும். சேலத்தில் குகை பகுதியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடிகளையும் தயாரிக்கும் தொழிலில் காலங்காலமாக சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாகக் கட்சிக் கொடி தயாரிப்பாளர்கள் சிலர் நம்மிடம் பேசினர்.

''தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சிக் கொடி தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். கொடி தயாரிப்புக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான துணிகள் திருப்பூரில் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கிருந்து நேரடி கொள்முதல் செய்து, கொடியாகத் தைத்துக் கொடுக்கிறோம். தேர்தல் காலத்தில் மட்டுமின்றி குடியரசு தினம், சுதந்திரதினம் போன்ற தேசிய பண்டிகைகளின்போதும் தேசியக் கொடிகளை அதிகளவில் தயாரித்து வருகிறோம்.

பொதுவாக மக்களவை தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் காலங்களில் கட்சிக் கொடிகளுக்கான தேவை அதிகமாக இருக்கும். எங்களுக்கும் ஆர்டர்கள் குவியும். குறிப்பாக அதிமுக, திமுக கொடிகள்தான் அதிகளவில் தயாரித்துக் கொடுத்துவருகிறோம். 5 அடிக்கு 2 அடி, 3 அடிக்கு 2 அடி, முக்கால் அடிக்கு 15 செமீ முதல் 20 செமீ வரையிலான நீளமுள்ள கட்சிக் கொடிகளைத் தயாரிக்கிறோம். ஒரு கொடியை அதன் அளவைப் பொறுத்து 10 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம். நாங்கள் தயாரிக்கும் கொடிகள் உள்ளூர் மட்டுமின்றி நெல்லை, காஞ்சிபுரம், கோவை, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால், எங்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே கொடிகள் கேட்டு ஆர்டர்கள் வந்தவண்ணம் உள்ளன. மார்ச், ஏப்ரல் மாதங்களில் இன்னும் அதிகளவில் ஆர்டர்கள் வரும் என எதிர்பார்க்கிறோம். அதற்கேற்ப தொழிலாளர்களும் ஆர்வமாகவும், போதிய அளவிலும் உள்ளனர்'' என்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT