ADVERTISEMENT

மாவட்டமாக்கினால் எங்கள் நகரே தலைநகரம்....மோதும் அமைச்சர் – எம்.எல்.ஏ.

03:24 PM Nov 12, 2019 | Anonymous (not verified)

32 மாவட்டங்களாக இருந்த தமிழ்நாடு தற்போது புதிய மாவட்டங்களாக கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 37 மாவட்டங்களாகியுள்ளது. அடுத்ததாக திருவண்ணாமலை மாவட்டத்தை பிரிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றுவருதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT


தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இரண்டாவது பெரிய மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம். இதன் பரப்பளவு 6188 சதுர கி.மீ. பரப்பளவில் இதை விட சிறிய மாவட்டமான வேலூர் மாவட்டமே மூன்றாக பிரிப்பதாக அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. மாவட்டத்தை பிரித்து ஆரணி மாவட்டமாக்க வேண்டுமென அப்பகுதியை சேர்ந்தவர்களும், செய்யாரை மாவட்டமாக்க வேண்டும் என ஒரு கோரிக்கை வைத்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இது ஆளும்கட்சியிலும் நீயா? நானா என்கிற மோதலை உருவாக்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்டம் உருவாக்கி அதற்கு செய்யாரை மாவட்ட தலைநகராக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வைத்து பேரணி நடத்திய செய்யார் பகுதி மக்கள், அரசியல் கட்சியினர் இது தொடர்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி என மனு தந்து வருகின்றனர்.

"மாவட்டத்தை பிரித்து ஏன் செய்யாரை தலைநகராக அறிவிக்க வேண்டுமென கேட்கிறீர்கள்" என திருவத்திபுரம் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் ராமலிங்கத்திடம் கேட்டபோது, "மொழிவாரி மாநிலங்கள் பிரிப்புக்கு முன்பு இந்த பகுதி சித்தூர் மாவட்டத்தில் இருந்தது. மாநில சீரமைப்புக்கு பின் வடாற்காடு மாவட்டம் என உருவாக்கப்பட்டு அதில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செய்யார் என 5 வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டு நிர்வாகம் நடைபெற்றன. 1989ல் கலைஞர் முதல்வராக இருந்த போது வேலூர் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை வருவாய் கோட்டம், செய்யார் வருவாய் கோட்டத்தை பிரித்து திருவண்ணாமலை மாவட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது வரை திருவண்ணாமலை மாவட்டத்துக்காரராக இருந்து வருகிறோம். திருவண்ணாமலைக்கும் எங்களுக்கும் நீண்ட தொலைவு என்பதால் செய்யாறு பகுதியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என அடிக்கடி குரல் எழுப்பிவந்தோம். அதற்கான வாய்ப்பு இன்னும் வரவில்லை என கடந்த காலங்களில் அரசு பதில் அளித்து வந்தது. கடந்த மாதம் வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு இராணிப்பேட்டை மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் அறிவித்துவிட்டார். மாநில சீரமைப்பின் போது வருவாய் கோட்டங்களாக இருந்த 5 கோட்டங்களில் 4 கோட்டங்கள் மாவட்டங்களாகிவிட்டன. இப்போது வரை கோட்டமாகவே உள்ள செய்யாரை மாவட்டமாக அறிவிக்கச்சொல்லியே கேட்கிறோம்.

ADVERTISEMENT


இந்த பகுதி வளர்ச்சிக்காக வருவாய் கோட்டத்தை உருவாக்கியது போல, செய்யார் கல்வி மாவட்டம் என கல்வித்துறை உருவாக்கியது. தமிழகத்தில் முதல் அரசுக்கலைக்கல்லூரி செய்யார் நகரில் தான் உருவாக்கப்பட்டது. அரசின் 33 துறைகளில் 26 துறைகள் இந்த செய்யாரில் உள்ளன, இவைகள் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை இங்கு தான் உள்ளது. செய்யாரை தலைமையிடமாக கொண்டு மாவட்டத்தை உருவாக்கினால் இந்த மாவட்டத்துக்குள் வரும் நிலையில் உள்ள வந்தவாசி, ஆரணி, சேத்பட், வெம்பாக்கம், ஆரணி தாலுக்காக்களில் ஆரணி, சேத்பட் தவிர்த்து மற்ற தாலுக்காக்களில்வ வசிக்கும் மக்கள் அரை மணி நேரத்தில் செய்யார் வந்துவிட முடியும். மிகவும் பின் தங்கிய இந்த பகுதி வேகமாக வளர்ச்சி பெறும். செய்யார் சிப்காட் பகுதியும் வளர்ச்சி பெறும்" என்றார்.

ஆரணி மாவட்டம் என அறிவித்து ஆரணியை மாவட்ட தலைநகராக அறிவிக்க வேண்டுமென ஆரணி நகர வியாபாரிகள் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம் நடத்தி ஒரு லட்சம் கையெழுத்து வாங்கி அரசிடம் ஒப்படைக்கும் வேலையில் உள்ளனர். அதோடு, அனைத்து கட்சி பிரமுகர்களின் ஆதரவை திரட்டி வருகின்றனர். சில கூட்டங்களையும் நடத்தியுள்ளனர்.

ஆரணி மாவட்டம் என அறிவித்து மாவட்ட தலைநகராக ஆரணியை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கையெழுத்து இயக்கம் நடத்திவரும் ஆரணி சிறு, குறு, பெரு வணிகம் செய்வோர் நலச்சங்கத்தின் தலைவர் அருண்குமாரிடம் பேசியபோது, "ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மட்டும் சுமார் 400 அரிசி ஆலைகள் உள்ளன. உலக புகழ்பெற்ற களம்பூர் பொன்னி அரிசி இங்கிருந்து தான் உலகத்தின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதேபோல் 1500 பட்டு புடவை உற்பத்தியாளர்கள் உள்ளார்கள். புகழ்பெற்ற ஆரணி பட்டு இந்தியாவை தாண்டி பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த இரண்டு தொழிலை நம்பி மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தில் அதிகளவு ஜீ.எஸ்.டி செலுத்தும் பகுதியாக இந்த ஆரணி பகுதி உள்ளது. அரசுக்கு செலுத்தும் வருவாய் அடிப்படையில் ஆரணி பகுதி முன்னிலையில் உள்ளது. அதனால் தான் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என கேட்கிறோம். அதுமட்டுமல்ல ஆரணி பாராளமன்ற தொகுதி என்கிற பெயரில் தொகுதி உள்ளது. அதனால் ஆரணி மாவட்டம் என்பதே சரியாக இருக்கும் என்றார். ஆரணி என்பது புதிய மாவட்டத்தின் மையமாக இருக்கும். மாவட்டம் உருவாக்கப்படும்போது அதில் ஆரணி, செய்யார், வந்தவாசி ( தனி ), போளுர் தொகுதிகள் இடம்பெறும். அப்படி வரும் பட்சத்தில் மாவட்ட தலைநகருக்கு ஆரணி தான் மையமாக இருக்கும். இங்குயிருந்து அனைத்து ஊருக்கும் தேவையான போக்குவரத்து வசதியுள்ளது. அதே போல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சியில் திருவண்ணாமலை மற்றும் ஆரணி நகராட்சி இரண்டு மட்டுமே பழமையானது. அதேபோல் அரசின் பொறியியல் கல்லூரி இங்கு உள்ளது" என்றார்.


இந்நிலையில், ஆரணியை மாவட்ட தலைநகராக்கி புதிய மாவட்டம் கொண்டு வருவேன் என ஆரணி எம்.எல்.ஏவும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர்.ராமச்சந்திரன் கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். ஆரணி தொகுதி எம்.எல்.ஏவாக அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் உள்ளார். செய்யார் தொகுதி எம்.எல்.ஏவாக தூசி.மோகன் உள்ளார். இருவரும் ஆளும்கட்சியான அதிமுகவை சேர்ந்தவர்கள். மாவட்டத்தை பிரிக்க இருவரும் தீவிரம் காட்டிவருகின்றனர். பிரிக்கப்படும் மாவட்டத்துக்கு தங்கள் நகரம் தான் மாவட்ட தலைநகராக இருக்க வேண்டும் என இருவரும் அரசியல் ரீதியாக மோதுகின்றனர். நீயா, நானா பார்த்துவிடுவோம் என தங்களுக்கு சாதகமாக அரசு ஆவணங்களை திரட்டி வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT