ADVERTISEMENT

கல்லூரியில் சாதி பாகுபாடு; மூன்று பேராசிரியர்கள் பணியிட மாற்றம்

02:43 PM Aug 29, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சாதி பாகுபாடு காட்டிய மூன்று பேராசிரியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாணவர்களிடையே சாதி பாகுபாடு காட்டி மோதல்களை உருவாக்கும் வகையில் செயல்பட்டதாக 3 பேராசிரியர்கள் மீது புகார்கள் எழுந்தன. சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் சாதி பாகுபாடு நிலவுவதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து வியாசர்பாடி, கும்பகோணம் ஆகிய பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில் உண்மைத்தன்மை இருப்பதாக மாணவர்களிடம் இருந்து கேட்டு அறிந்தனர்.

அதிகாரிகளின் விசாரணையின் அடிப்படையில், வியாசர்பாடி அரசு கல்லூரியில் பணியாற்றிய ரவி மயிசின், சிவகங்கையில் பணியாற்றிய கிருஷ்ணன், கும்பகோணத்தில் பணியாற்றிய சரவண பெருமாள் ஆகிய மூன்று பேராசிரியர்களையும் நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்து கல்லூரி கல்வி இயக்ககம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இதுபோன்று அரசு மற்றும் கலைக் கல்லூரியில் மாணவர்களிடையே சாதிய பாகுபாடு காட்டும் பேராசிரியர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து, அவர்களை வேறு ஊர்களுக்குப் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என்று கல்லூரி கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய கல்லூரி கல்வி இயக்குநர் கீதா, “ஆசிரியர் என்பவர் சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பேராசிரியர்களே தவறு செய்யும் போது அவர்களிடம் பாடம் கற்றுக் கொள்ளும் மாணவர்கள் நாளை எப்படி சிறந்த மாணவர்களாக இருப்பார்கள். மாணவர்களுக்கு பாடம் எடுப்பது; அவர்களை தேர்வுக்கு தயார் செய்வது; அடுத்த நாள் பாடத்துக்கு தங்களை தயார் செய்வது என அந்த வேலைகளைப் பார்ப்பதற்கே கல்லூரி பேராசிரியர்களுக்கு நேரம் இருக்காது. அப்படி இருக்கையில் இதுபோன்று சமூகம் சார்ந்த விஷயங்களை மாணவர்கள் மத்தியில் பேசுவதற்கும், அவர்களைத் தவறான பாதைகளில் அழைத்துச் செல்வதற்கும் அவர்களுக்கு எப்படி நேரம் இருக்கிறது. கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் நமது பிள்ளைகள் தான் என்ற எண்ணம் பேராசிரியர்களுக்கு வர வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலங்களில் எங்கும் நடக்கவில்லை. இனிமேல், இதுபோன்று நடந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT