ADVERTISEMENT

இளைஞருக்கு சரமாரி வெட்டு; குடும்பத்தை மிரட்ட நாயை வெட்டி வீசிய கும்பல்!

06:24 PM Jun 01, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூருக்கு அருகே உள்ளது அத்திப்பட்டு ஊராட்சி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் புவனேஷ்குமார். 27 வயதான இவர் அந்தப் பகுதியில் உள்ள தனது நண்பர்களுடன் அவ்வப்போது மது அருந்துவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு புவனேஷ்குமாரும் மற்றும் அவரது நண்பர் கிரண் என்பவரும் அங்குள்ள கிரிக்கெட் மைதானத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கிரவுண்டுக்குள் வந்த மூன்று நபர்கள் கிரணை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அந்த சமயத்தில், தன்னுடைய நண்பன் தாக்கப்படுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த புவனேஷ்குமார் அந்த மர்ம நபர்களை தடுத்து நிறுத்தியுள்ளார்.

அப்போது மதுபோதையில் இருந்த மர்ம கும்பல், மறைத்து வைத்திருந்த அரிவாளால் புவனேஷ்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த புவனேஷ்குமார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே சமயம், இந்த சம்பவம் தொடர்பாக சங்கர், பிரபாகரன் மற்றும் ரோகித் ஆகிய மூன்று மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து மீஞ்சூர் போலீசார், குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புவனேஷ்குமாரின் வீட்டுக்கு கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் அந்த மூன்று பேர் மீண்டும் வந்துள்ளனர். தங்கள் மீது போடப்பட்டுள்ள கொலை முயற்சி வழக்கினை வாபஸ் பெறச் சொல்லி பயங்கர அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் புவனேஷ்குமாரின் வளர்ப்பு நாய் அந்த மர்ம கும்பலை பார்த்து குரைத்துக்கொண்டே இருந்துள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த கும்பல், புவனேஷ்குமார் குடும்பத்தை எச்சரிக்கும் விதமாக ஈவிரக்கமின்றி அந்த நாயை வெட்டிக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த புவனேஷ்குமார் குடும்பத்தினர் கண்ணீர்விட்டுக் கதறியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தலைமறைவாக இருந்த சங்கர், பிரபாகரன், ரோகித் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்கள் மீது நாயைக் கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கஞ்சா போதையில் இருந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT