ADVERTISEMENT

பொள்ளாச்சி பாலியல் கைதி சிறையில் உண்ணாவிரத மிரட்டல் 

10:19 AM Jul 02, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதாகி சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கைதி ஒருவர், தனது அறைக்கு டிவி வேண்டும் என்று கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019ம் ஆண்டு, ஒரு கும்பல் இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாகவும் புகார்கள் கிளம்பின. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரிக்கின்றனர். இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சதீஸ், வசந்தகுமார், சபரிராஜன், அதிமுக பிரமுகர் அருளானந்தம், பாபு, அருண்குமார், மணிவண்ணன், ஹைரன் பால் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, இந்த வழக்கு சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐ பிரிவுக்கு மாற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கு விசாரணை, கோவையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சபரிராஜன் திடீரென்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சிறைத்துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். தனது பெற்றோருக்கு வயதாகி விட்டதாகவும், அவர்கள் சேலம் சிறையில் வந்து தன்னை சந்திப்பதில் சிரமம் உள்ளதாகவும், அதனால் தன்னை கோவை மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் அவரிடம் சமாதானப் பேச்சு நடத்தினர். இதைத் தொடர்ந்து கைதி சபரிராஜன் வழக்கம்போல் சிறை நிர்வாகம் வழங்கிய உணவை சாப்பிட்டார். இது தொடர்பாக மத்திய சிறைக்காவலர்கள் கூறுகையில், ''முதலில் அவர் தனது அறையில் தனியாக டி.வி., வைக்க வேண்டும் என்று கோரிதான் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாகக் கூறினார். பின்னர் அவர், கோவை சிறைக்கு மாற்றக்கோரி போராட்டம் நடத்த உள்ளதாக மாற்றிக் கூறினர். ஆனால் அவர் வழக்கம்போல் சிறை நிர்வாகம் வழங்கும் உணவுகளை சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்,'' என்றனர். இந்த சம்பவம் சேலம் சிறையில் கைதிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT