ADVERTISEMENT

சினிமா பாணியில் கடத்தலில் ஈடுபட்டவர்களை சேஸிங்கில் பிடித்த காவலர்கள்!

10:05 AM Sep 03, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சினிமா பாணியில் காவலர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பிக்க முயன்ற மது கடத்தல் கும்பலை திருவாரூர் போக்குவரத்து காவலர்கள் விரட்டிப் பிடித்துள்ளனர். திருவாரூர் வாளவாய்கால் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த கார் ஒன்றை நிறுத்தினர். ஆனால் அந்தக் காரோ நிற்காமல் வந்த வேகத்தைவிட மின்னல் வேகத்தில் பாய்ந்தது. ஒன்றும் புரியாமல் நொடி நேரம் விழிபிதுங்கிய போக்குவரத்து காவல்துறையினர், மற்ற காவலர்களுக்குத் தகவலைத் தெரிவித்தனர்.

திருவாரூர் விளமல் அருகே கார் சீரிக்கொண்டு வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனாலும் சற்றும் யோசிக்காத அந்தக் கார், காவலர்களின் வாகனங்களை இடித்துவிட்டு மீண்டும் மின்னல் வேகத்தில் சென்றது. விடாப்பிடியாக அந்தக் காரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்ற போக்குவரத்து துறை காவலர் கமலநாதன், நீண்ட தூரம் சென்று காரை மடக்கிப் பிடித்தார். அந்தக் காரை சோதனை செய்ததில் 400க்கும் மேற்பட்ட பாண்டிச்சேரி மது பாட்டில்களை காரைக்காலிலிருந்து கடத்திச் சென்றது தெரியவந்தது.

அந்தக் காரை ஓட்டிச் சென்ற இராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திரகுமார், மற்றும் முத்து, முருகன் ஆகியோரை கைது செய்தனர். அதோடு கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு, வழக்குப் பதிவு செய்ததோடு, கடத்தியவர்களை வைத்தே மது பாட்டில்களை அழித்தனர். சிறப்பாக செயல்பட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளர் ராஜ்மோகன், தலைமை காவலர் சரவணன், கமலநாதன் ஆகிய போக்குவரத்து காவல்துறையினரை நேரில் அழைத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், பாராட்டி மகிழ்வித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT